Published : 20 Oct 2021 03:15 PM
Last Updated : 20 Oct 2021 03:15 PM

கோயில் அர்ச்சகர்கள் நியமனம்; இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டது: உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பணி நியமனங்கள் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளது.

கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை பணி புதிய விதிகள் 2020 ஆம்ஆண்டு கொண்டுவரப்பட்டது.

அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன.

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சிஐடி நகரை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், டி.ஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று (அக். 20) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும், பரம்பரை அறங்காவலர்களால்தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 28-க்கும் மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளன, அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், ஆனால், அர்ச்சகர் பணி நியமனங்கள் உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x