Published : 20 Oct 2021 02:44 PM
Last Updated : 20 Oct 2021 02:44 PM

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு; உறுதித்தன்மை- முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை

வடகிழக்குப் பருவமழையையொட்டி புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்தும், செம்பரம்பாக்கம் ஏரியில் ரூ.2.24 கோடி செலவில் நடைபெற்று வரும் மதகுகளின் அடைப்பான்களைச் சீரமைக்கும் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20.10.2021) வடகிழக்குப் பருவமழையையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதி தன்மை குறித்துப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.

சென்னை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீராதாரமாக விளங்கும் புழல் ஏரியானது 21.20 அடி உயரமும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். தற்போது இப்புழல் ஏரியில் 18.88 அடி உயரம், 2786 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் உபரி நீர் கால்வாயின் மொத்த நீளம் 13,500 மீட்டர் ஆகும். சென்னை மண்டலத்திற்கு வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு வெள்ளத்தடுப்புப் பணிக்காக மொத்தம் ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் புழல் செங்குன்றம் ஏரியின் உபரிநீர் கால்வாய், அம்பத்தூர் ஏரி உபரி நீர் கால்வாய், தனிகாச்சலம் நகர் கால்வாய் ஆகியவற்றிற்கு ரூ.77.50 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கால்வாயில் உள்ள நீர்த்தாவரங்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தடையில்லாமல் செல்ல ஏதுவாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித் தன்மை குறித்தும், ஏரியின் 5 மற்றும் 19 கண் கொண்ட மதகுகளில் உள்ள அடைப்பான்களை 2 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடித்திடவும், வடகிழக்குப் பருவமழையையொட்டி ஏரியின் கரைகளைத் தொடர்ந்து கண்காணித்திடவும் பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற முக்கிய ஏரிகளில் உள்ள அனைத்து விதமான கழிவுகளையும் அகற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானதாகும். செம்பரம்பாக்கம் ஏரியானது தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். இந்த ஏரி பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த ஏரி பாலாறு அணைக்கட்டு முறையின் கடைநிலை ஏரியான திரும்பெரும்புதூர் ஏரியிலிருந்து செளத்ரிகால் வாய்க்கால் மூலமாக உபரிநீரைக் கொண்டு வருகிறது. மேலும், கூவம் ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொரட்டூர் அணைக்கட்டிலிருந்து நீர்வரத்து பெறக்கூடிய மற்றொரு முறையுமாகும். மேற்படி ஏரியிலிருந்து வெளியேறும் மிகைநீர் அடையாற்றில் விழுந்து தென்சென்னை மூலமாக அடையாறு முகத்துவாரத்தில் கலக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இணைப்பு கால்வாய் மூலமாக கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு ஏதுவாக இந்த ஏரி பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரி சென்னைக்குக் குடிநீர் வழங்கும் இரண்டாவது கடைநிலை ஏரியாகும்.

மேலும், கிருஷ்ணா கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரளவின் உயரத்தை 22 அடியிலிருந்து 24 அடி கொண்டதாக 2 அடி உயர்த்தியும், அதன் கொள்ளளவானது 3120 மில்லியன் கன அடியிலிருந்து 3645 மில்லியன் கன அடியாகவும் 1996ல் உயர்த்தப்பட்டது. தற்போதைய நீரின் ஆழம் 20.77 அடியாகும். செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாயின் மொத்த நீளம் 6200 மீட்டர் ஆகும்.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்ஏற்பாடாக 37.50 லட்சம் ரூபாய் செலவில் மணப்பாக்கம், குன்றத்தூர், கோவூர், தந்தி கால்வாய், நத்தம் கால்வாய், ஆகிய கால்வாய்களில் உள்ள நீரியல் தாவரங்கள், ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தடையில்லாமல் சென்று அடையாற்றில் கலக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தண்ணீரை சுத்திகரிப்பதற்காக 296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2007-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையம் மூலம் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பல்வேறு ஏரிகளில் உள்ள நீரின் இருப்பு மற்றும் நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்ப செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரை எடுத்து சுத்திகரித்து சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது".

இவ்வாரு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x