Published : 16 Jun 2014 09:50 AM
Last Updated : 16 Jun 2014 09:50 AM
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்காக அனுமதியின்றி நடந்த கேபிள் பதிக்கும் பணியில், சென்னைக்கு மின்சாரம் விநியோ கிக்கும் 6 கேபிள்கள் துண்டிக் கப்பட்டன. இதனால், மின் வாரியத் துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு, ஒருவார காலமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகருக்கு மின் விநியோகம் செய்ய, 168 துணை மின் நிலையங்களும் சுமார் 2,200 மின்னூட்டிகளும் (ஃபீடர்கள்) உள்ளன. இவற்றில் 57 துணை மின் நிலையங்கள், 110 கே.வி. திறன் கொண்டவை. இவற்றிலிருந்து 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட 88 மின்னூட்டிகள் மூலம் மின் விநியோகம் மேற்கொள் ளப்படுகிறது.
இந்நிலையில் மயிலாப்பூர், திருமங்கலம், கே.கே.நகர், கோடம் பாக்கம், கோயம்பேடு, கொளத் தூர், வில்லிவாக்கம், பல்லாவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவியது. இதுகுறித்து மின் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்:
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் அகண்ட அலை வரிசை இணைப்புக்காக ஆப்டிகல் பைபர் கேபிள் மற்றும் தனியார் ஐ.டி. நிறுவனங்களுக்கு சர்வர் கேபிள் பதிக்கும் பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன. கோயம்பேடு வடபழனி நெடுஞ்சாலையில் தெற்காசிய விளையாட்டு கிராம குடியிருப்புக்கு எதிரே கடந்த வாரம் கேபிள் பதிக்கும் பணி நடந்தது. ‘ட்ரெஞ்ச் லெஸ்’ எனப்படும் பூமியை மேலிருந்து தோண்டாமல், உள்ளுக்குள் தோண்டும் தொழில்நுட்பத்தின் மூலம் ஆப்டிக் கேபிள் பதிக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது, கீழே பதிக்கப்பட்டிருந்த 110 கே.வி. மின் கேபிள்கள் மற்றும் மின்னூட்டிகள் என மொத்தம் 6 இணைப்புகளை பூமியில் துளையிடும் கருவி துண்டித்தது. இதனால், பல பகுதிகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் செய்து நிலைமையை தினமும் சமாளித்து வருகின்றனர்.
எந்த இடத்தில் கேபிள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று பொறியாளர்கள் 3 நாட்கள் ஆய்வு நடத்தி சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளனர். சம்பந்தப் பட்ட தனியார் நிறுவனத்தினர் இந்தப் பழுதை சரி செய்ய மறுத்து விட்டதால், மின் வாரியத்தினரே புதிதாக 6 கேபிள்களையும் நீண்ட தூரத்துக்கு மீண்டும் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினையால் மின் வாரியத்துக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள் ளதாக கூறப்படுகிறது. இந்த இழப்பை தனியார் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுவதற்கு, மின் வாரிய உயரதிகாரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே, ரூ.70 ஆயிரம் கோடி இழப்பில் தவிக்கும் மின் வாரியத்துக்கு, 3 நாள் மின் விநியோகப் பிரச்சினை ஏற்பட்டது டன், ஒரு கோடி ரூபாய் கூடுதல் இழப்பும் பணிச்சுமையும் ஏற்பட்டுள்ளது.
அரசுத் துறைகளின் மெத்தனம்
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பூமிக்கடியில் கேபிள் தோண்டுவதற்கு பிஎஸ்என்எல், நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு முன்னறிவிப்பு கொடுத்து, தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். போலீஸ் நிலையத்திலும் போக்குவரத்து போலீஸிடமும் அனுமதி பெற வேண்டும். இழப்புகள் ஏற்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க முன்கூட்டியே உத்தரவாதம் தர வேண்டும்.
ஆனால், தற்போது பிரச்சினை ஏற்பட்ட பகுதியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம், எந்தத் துறையிடமும் அனுமதி பெறவில்லை. விபத்து ஏற்பட்ட பிறகும் அரசுத்துறை அதிகாரிகள், தனியார் நிறுவனத்தினருடன் மறைமுக நட்பு கொண்டுள்ளதால் பிரச்சினையை வெளியே தெரியாமல் மறைக்க முயற்சி நடக்கிறது. போலீஸார் புகாரைப் பெற மறுத்தபிறகும், மின் வாரிய உயரதிகாரிகள் மவுனமாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT