Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM

தி.மலையில் சோழர் கால நடுகல் கல்வெட்டு: 2 சமய பிரிவுகளின் துறவிகளுக்கு முக்கியத்துவம்

திருவண்ணாமலையில் உள்ள சோழர் கால நடுகல் கல்வெட்டு.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் உள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகன் கல்வெட்டு மற்றும் ஒரு வரி கல்வெட்டு ஆகியவை சோழர் காலத்தைச் சேர்ந்தது என திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவம் நிர்வாகி பாலமுருகன் தலைமை யிலான குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கி.பி.928-ம் ஆண்டில் நடுகல் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. 1,093 ஆண்டு கள் பழமையானது. ஸ்ரீ பராந்தகன் இருமுடி சோழனுக்கும், அவரது மனைவி செம்பியன் மாதேவியார் (இப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் வைரமேக வாணகோவரையரின் மகள்) பிறந்தவர் கண்டராதித்த சோழர் என கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலையாருக்கு மதிய உணவு பூஜை படையல் செய்யும், அதே நேரத்தில் 20 காபாலிக துறவிகளுக்கு உணவு கொடுப்பதற்காக, வைச்ச பூண்டி என்ற ஊர் முழுவதையும் துறவிகளுக்கு கொடுத்துள்ளார் கண்டராதித்தர் சோழர். காபாலிகளர்களின் குருவான வல்லக்கொன்றை சோமீசுவரர் கங்காளபடாரர் மற்றும் அவரது சீடர்கள் ஆகியோரும் வைச்சப்பூண்டி கிராமத்தில் இருந்து கிடைக்கும் வரி, பொன் மற்றும் நிலங்களை அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. காபாலிகம், காளாமுகம் ஆகிய சமய பிரிவுகளை சேர்ந்த துறவிகள், திருவண்ணாமலையில் பராந்தகன் காலத்தில் அரசு ஆதரவுடன் சிறப்பாக இருந்துள்ளனர். இந்த இரண்டு சமய பிரிவுகளும், திருவண்ணாமலை பகுதியில் பரவி விளங்கியதை கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. பராந்தக சோழனுக்கு இருமுடி சோழன் என்ற பட்டமும் இருந்துள்ளது தெரியவருகிறது.

சோழர் கால சிற்ப அமைதி கொண்ட நடுகல்லாகும். ஒரு வீரன் தனது வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் வைத்துள்ளார். அவனது தலையில் கரண்ட மகுடமும், காதில் பெரிய குண்டலமும், இடுப்பில் கச்சை ஆடையும் மற்றும் வாள் உறையும் உள்ளன. எதிரியை தாக்க ஓடுவது போல இரண்டு கால்களும் மடக்கிய நிலையில் உள்ளன. மேலும், இரண்டு வரி கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளன. மேலும், கோயில் எதிர் திசையில் உள்ள மற்றொரு சிறிய கல்வெட்டில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் உள்ளன. அதன் மேல்புறத்தில் காணப்படும் ஒரு வரியில்,  மாஹேஸ்வர நம்பி என பொறிக்கப்பட்டுள்ளது. இவர் சிவன் பக்தராக இருக்கக்கூடும்” என தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ள கல்வெட்டு அறிஞர்கள் சு.ராசகோபால், இல.தியாகராஜன், சு.ராஜவேல் ஆகியோர், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாறு பற்றியும், சைவ சமய பிரிவான காபாலிகம், காளாமுகம் பற்றியும், கண்டராதித்தன் பிறப்பு பற்றி குறிப்பிடும் சிறப்பான கல்வெட்டாகும். இக்கல்வெட்டு மூலமாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டை பாதுகாக்க அரசாங்கம் முன் வர வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x