Published : 10 Mar 2016 04:03 PM
Last Updated : 10 Mar 2016 04:03 PM
கிள்ளியூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளனர். காமராஜர் விசுவாசிகள் நிறைந்த இத்தொகுதியின் வரலாற்றை மாற்ற தற்போது பிற கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்றைக்கும் பெருந்தலைவர் காமராஜர் பெயரை சொல்லி வாக்குகள் சேகரிக்கும் யுக்தியை பெரும் பாலான கட்சியினர் கடைபிடித்து வருகின்றனர்.
இதில் முதன்மையாக இருப்பது கிள்ளியூர். இங்கு காமராஜர் விசுவாசிகள் மட்டுமின்றி வீடுகள்தோறும் அவரது படத்தை வைத்து வணங்கும் பக்தர்கள் நிறைந்துள்ளனர். எனவே தான் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையே இத்தொகுதி மக்கள் எம்.எல்.ஏ.வா க்கி அழகு பார்த்து வருகின்றனர்.
காங்கிரஸ் கோட்டை
1952-ம் ஆண்டில் இருந்து கிள்ளியூர் தொகுதி, தமிழகத்தில் பிற தொகுதிகளில் இல்லாத அளவு காங்கிரசுக்கு கைகொடுத்துள்ளது. 1952-ல் இத்தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. என்ற பெருமையை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற பொன்னப்ப நாடார் பெற்றார். தொடர்ந்து 1954-லும் அவரே வெற்றிபெற்றார். 1957-ல் குமரி தந்தை மார்ஷல் நேசமணி, 1962-ல் பொன்னப்பநாடார், 1967-ல் வில்லியம் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றனர்.
1971-ல் காங்கிரஸ் வேட்பாளர் டென்னிஸ் வெற்றி பெற்றார். 1977, 1980 ஆகிய இரு தேர்தல்களில் பெருந்தலைவர் காமராஜரின் முழக்கத்தோடு தேர்தலை சந்தித்த ஜனதா கட்சி வேட்பாளர் விஜயராகவன் வெற்றி பெற்றார். 1984-ல் ஜனதாகட்சி சார்பில் போட்டியிட்ட குமாரதாஸ் எம்.எல்.ஏ.வானார். 1989-ல் ஜனதா கட்சியை சார்ந்த விஜயராகவன் சுயேட்சையாக போட்டியிட்டபோதும் காமராஜர் புகழால் வெற்றிபெற்றார்.
1991-ல் ஜனதா தாளம் சார்பில் போட்டியிட்ட குமாரதாஸ் தொகுதியை கைப்பற்றினார். அடுத்த தேர்தலிலும்(1996) அவர் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2001 தேர்தலிலும் அவரே வெற்றிபெற்றார். இத்தொகுதியில் அதிகமாக (4 முறை) வெற்றி பெற்ற பெருமை குமாரதாசுக்கு உண்டு.
கடந்த 2006, 2011 ஆகிய இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜான்ஜேக்கப் வெற்றி பெற்றார். தற்போது அவர் தமாகா மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார்.
பிற கட்சிகள் வியூகம்
64 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தவிர பிற கட்சிகளால் கிள்ளியூர் தொகுதியில் வேரூன்ற முடியவில்லை.
இங்கு நாடார்களுக்கு அடுத்த படியாக மீனவர்கள் வாக்கு அதிக மாக உள்ளது. அதிலும் தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர், மீனவர்களின் வாக்கு இரட்டிப்பாகி உள்ளது. மீனவர்களின் வாக்குகள் 80 ஆயிரம் வரை உள்ளன. இதனால் மீனவர்களின் வாக்குகளை பெற மற்ற கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.
கடந்த முறை காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஜான்ஜேக்கப் இத்தேர்தலில் தமாகா சார்பில் கிள்ளியூரில் களம் இறங்குவதாக தெரிகிறது. அதேநேரம் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் அசோகன் சாலமன் அக்கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை காங்கிரஸ் கோட்டையாக நிலைத்து நிற்கும் கிள்ளியூர் தொகுதியின் தேர்தல் வரலாறு மாற்றி எழுதப்படுமா? என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT