Published : 19 Oct 2021 04:03 PM
Last Updated : 19 Oct 2021 04:03 PM
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,343 கன அடி தண்ணீர் இன்று திறந்து விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் உள்ள 20 ஷட்டர்கள் அகற்றப்பட்டு, ரூ.55 கோடி மதிப்பில் புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. ஷட்டர்கள் அனைத்தும் 20 அடி உயரம் கொண்டவை. இதனால், அணையில் 99 அடி வரை மட்டும் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்ற நிலை உருவானது. இது தொடர்பாக, தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக, தென்பெண்ணையாற்றுப் படுகையில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், கடந்த 2 வாரங்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சாத்தனூர் அணை இன்று (19-ம் தேதி) காலை திறக்கப்பட்டது. செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்தார். அப்போது பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளர் சண்முகம், உதவிச் செயற்பொறியாளர் அறிவழகன், உதவிப் பொறியாளர்கள் சிவக்குமார், ராஜேஷ், மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,343 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அவை முழுவதுமாக வெளியேற்றப்படுகின்றன. அணையின் இடது மற்றும் வலது புறக் கால்வாய் வழியாக விநாடிக்கு 500 கன அடி தண்ணீரும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டுக்கு விநாடிக்கு 843 கன அடி தண்ணீரும் என மொத்தம் விநாடிக்கு 1,343 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏரிகள் நிரம்பி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 12,152 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் எனப் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மூன்று மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT