Published : 19 Oct 2021 03:41 PM
Last Updated : 19 Oct 2021 03:41 PM
மதுரை மாட்டுத்தாவணி ‘ஸ்மார்ட் சிட்டி’ பழ மார்க்கெட்டில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகளையொட்டி எதிர்பார்த்தது போல் பழ வியாபாரம் நடக்காததால், வியாபாரிகள் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருந்த பல நூறு டன் சாத்துக்குடி பழங்கள் விற்பனையாகாமல் அழுகின.
அதில் ஒரு வியாபாரி ஒரு லாரி சாத்துக்குடி பழங்களைக் குப்பையில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முக்கியப் பண்டிகைக் காலங்களில் மதுரை மாட்டுத்தாவணி ‘ஸ்மார்ட் சிட்டி’ பழ மார்க்கெட்டில் பழ வியாபாரம் அமோகமாக நடக்கும். குறிப்பாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தென் தமிழகத்திலே மிக அதிக அளவில் பழ வியாபாரம் நடக்கும். அதனால், கடந்த வாரம் நடந்த ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்காக வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அனைத்து வகைப் பழங்களையும் வியாபாரிகள் கொள்முதல் செய்து ஸ்மார்ட் சிட்டி பழ மார்க்கெட்டில் விற்பனைக்காக வைத்திருந்தனர்.
ஆனால், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வியாபாரம் கடந்த வாரம் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஓரளவு நடந்தது. ஆனாலும், கடந்த ஆண்டைப் போல் வியாபாரம் இல்லை. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறு, குறு வியாபாரிகள், மக்கள், பழங்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. வீடுகளில் முடங்கினர்.
அதனால், ஸ்மார்ட் சிட்டி பழ மார்க்கெட்டில் அனைத்து வகைப் பழங்களும் டன் கணக்கில் தேங்கின. அதனால், விற்பனையாமல் தேங்கிய பழங்கள் அழுகத் தொடங்கின. நேற்று வியாபாரி ஒருவர், 10 டன் எடையுள்ள ஒரு லாரி சாத்துக்குடி பழங்களை மார்க்கெட் எதிரே உள்ள லேக்வியூ குப்பைத் தொட்டியில் கொட்டினர். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், அந்தப் பழங்களை நேற்று குப்பை லாரியில் ஏற்றினர். இதனை அந்த வழியாகச் சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், ''சாத்துக்குடி பழம் கிலோ ரூ.45க்கு விற்கிறது. தோட்டங்களிலேயே வியாபாரிகள் ரூ.40 முதல் ரூ.42க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். அதனால், விலை வீழ்ச்சியடையவில்லை. ஆனால், ஆயுத பூஜை வியாபாரம் கடந்த காலங்களைப் போல் மிக அதிகமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் 2 மடங்கு, 3 மடங்கு அதிகமாக பழங்களை வாங்கி வியாபாரிகள் வைத்திருந்தனர். அவை விற்பனையாகாமல் தேங்கி அழுகத் தொடங்கின. அதனால், வேறு வழியில்லாமல் ரூ.4 1/2 லட்சம் மதிப்புள்ள பழங்களைக் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT