Last Updated : 19 Oct, 2021 02:51 PM

 

Published : 19 Oct 2021 02:51 PM
Last Updated : 19 Oct 2021 02:51 PM

காங்கிரஸ் அரசில் நிறுத்தப்பட்ட தீபாவளி சிறப்பங்காடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்காலில் திறக்கும் புதுச்சேரி அரசு

புதுச்சேரி

குறைந்த விலையில் பொருட்கள் தரும் தீபாவளி சிறப்பங்காடி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்காலில் தற்போது மீண்டும் திறக்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ சார்பில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி சிறப்பங்காடி நடத்தப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் புதுச்சேரி, காரைக்காலில் தலா ஒரு இடத்தில் மட்டும் சிறப்பங்காடி அமைக்கப்பட்டு, மலிவு விலையில் தரமான மளிகைப் பொருட்கள், பட்டாசு ஆகியவை விற்கப்பட்டு வந்தன. அதன்பிறகு புதுவையில் நகரப் பகுதி மட்டுமின்றி, கிராமப் புறங்களிலும், காரைக்காலிலும் சிறப்பங்காடிகள் நடத்தப்பட்டன. 2017-ம் ஆண்டு புதுவையில் 8 இடம், காரைக்காலில் 1 இடம் என 9 இடங்களில் சிறப்பங்காடி நடந்தது. 17 நாட்கள் நடந்த சிறப்பங்காடியில் ரூ.11 கோடிக்குப் பொருட்கள் விற்பனையாகின.

ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு, கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி சிறப்பங்காடியை நடத்தவில்லை. பாப்ஸ்கோ நிறுவனம் நலிவடைந்ததாலும், ஊழியர்களுக்கே சம்பளம் வழங்க முடியாததாலும் சிறப்பங்காடி நடத்துவதை அரசு கைவிட்டதாகத் தெரிவித்தது.

இப்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மீண்டும் பாப்ஸ்கோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைச் செயல்படுத்த என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு முயன்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடியை நடத்த உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு ரூ.3.25 கோடி நிதியை அரசு ஒதுக்கியது.

இதன் மூலம் சிறப்பங்காடிக்குத் தேவையான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தீபாவளி சிறப்பங்காடி நடக்குமா என்று சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி பாப்ஸ்கோ தரப்பில் விசாரித்தபோது, "தீபாவளி சிறப்பங்காடி வரும் 24-ம் தேதி புதுவையில் கிழக்கு கடற்கரைச் சாலை கொக்கு பார்க் அருகிலும், காரைக்காலில் ஒழங்குமுறை விற்பனைக்கூட இடத்திலும் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்சரவணன் தலைமையில் முதல்வர் ரங்கசாமி திறந்து வைக்கிறார்.

சிறப்பங்காடியில் தரமான குறைந்த விலையில் தீபாவளிக்குத் தேவையான பருப்பு, சர்க்கரை, அரிசி, கோதுமை, மைதா மாவு, அரிசி மாவு, எண்ணைய் என தீபாவளி இனிப்பு, கார வகைகள் செய்வதற்குத் தேவையான மளிகைப் பொருட்களுடன், பட்டாசு விற்பனையும் நடக்கும். முக்கியமாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடி திறக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x