Published : 19 Oct 2021 02:19 PM
Last Updated : 19 Oct 2021 02:19 PM

கீழடியில் அகழாய்வு செய்த குழிகள் மூடாமல் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

கீழடியில் அகழாய்வு செய்த குழிகளை மூடாமல் மக்கள் பார்வைக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ் - ஆட்சி மொழி, தமிழ்க் கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, “பொதுவாக இதுபோன்ற ஆராய்ச்சி முடிந்தபின் குழிகள் மூடப்படும். ஆனால், இதனை அருங்காட்சியகமாக மாற்றும் முயற்சியில் உள்ளோம். கீழடியில் அகழாய்வு செய்த குழிகளை மூடாமல் மக்கள் பார்வைக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பழைய கட்டுமானங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்ப வசதிக்காக சென்னை ஐஐடியின் உதவியை நாட இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் சுடுமண் பானைகள், உறை கிணறுகள், காதணிகள், சூதுபவளம், மனித எலும்புகளுடன் முதுமக்கள் தாழி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, சிவகளை, கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்றும், இந்த அகழாய்வில் கண்டறியப்பட்டதைப் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என்றும், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x