Published : 19 Oct 2021 11:09 AM
Last Updated : 19 Oct 2021 11:09 AM

ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு 45 ஆக உயர்வு; பத்தாண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும்: அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பை 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதை பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (அக். 19) தன் ட்விட்டர் பக்கத்தில், "அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது 40 வயதைக் கடந்தவர்களின் ஆசிரியர் பணி கனவை நனவாக்க உதவும்!

ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அகற்ற வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஒரு மாதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இருமுறை இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார். பாமகவின் கோரிக்கை ஓரளவாவது ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என அரசு அறிவித்திருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டுக்குள் 42 வயதைக் கடந்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க முடியாது. எனவே, வயது வரம்பு உயர்வு குறைந்தது பத்தாண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x