Published : 19 Oct 2021 09:55 AM
Last Updated : 19 Oct 2021 09:55 AM
ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நேற்று (அக்.18) வெளியிட்ட அரசாணை:
"1. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும், இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட 09-09-2021 நாளிட்ட அறிவிக்கையில், ஆசிரிய பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும், இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மைத் துறை நாள்: 13.09.2021-ல் அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும், அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்தவரையில், மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
4. ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள், தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில், ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பைப் பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும், 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயித்து ஆணை வழங்கிடப் பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
5. பள்ளிக்கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது.
* தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்புக்கான விதி எண்: 6 (ஏ), 5 (ஏ) மற்றும் 6-ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக, உச்ச வயது வரம்பைப் பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
* ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.
* இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பை 31.12.2021 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2021 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்குப் பொருந்தும்.
* அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மைத் துறை நாள் 13.09.2021-ன்படி, ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பை, 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.
6. சிறப்பு விதிகளுக்கான உரிய வரைவு விதித் திருத்தங்களை உடன் அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT