Published : 18 Oct 2021 06:33 PM
Last Updated : 18 Oct 2021 06:33 PM
தமிழகத்திலுள்ள சிறைச்சாலைகளை நவீனப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கோவையில் இன்று (18-ம் தேதி) தெரிவித்தார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கோவை மத்திய சிறையில் இன்று (18-ம் தேதி) ஆய்வு செய்தார். அப்போது கைதிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். பின்னர், சிறை வளாகத்தில் வ.உ.சிதம்பரனார் நினைவாக வைக்கப்பட்டுள்ள செக்கிற்கும், அவரது உருவச் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், முன்னாள் எம்எல்ஏவும், மாநகர் கிழக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளருமான நா.கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கைதிகளின் கோரிக்கை
ஆய்வுக்குப் பிறகு, அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''இந்த ஆய்வில், சிறைக் கைதிகளின் கோரிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். பெரும்பாலான சிறைவாசிகள், முதல்வர் அறிவித்தபடி, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்துள்ளனர். அரசு அதற்கான நடவடிக்கையை முழு வீச்சில் எடுத்து வருகிறது. விரைவில், முன்கூட்டியே விடுதலை செய்யத் தகுதியுடைவர்கள் யார் என்ற விவரத்தை உள்துறை வெளியிடும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தொடர்புடைய 7 பேர் விடுதலைக்கு முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள எல்லா சிறைகளையும் நவீன மயமாக்க வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அவ்வாறு சிறைச்சாலைகள் நவீன மயமாக்கப்படும்போது, எல்லா கட்டிடங்களுமே புதுப்பித்துக் கட்டப்பட வேண்டும். அவ்வாறு கட்டப்படும் கட்டிடங்கள், சிறைக்கைதிகள் திருந்தி வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும். எல்லா மத்திய சிறைச்சாலைகளையும் திறந்தவெளி சிறைச்சாலைகளாக அமைக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை முடிவு.
திறந்தவெளிச் சிறை
எனவே திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு ஏற்றாற்போல் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். எனவே நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, அரசுதான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கோவை மத்திய சிறைச்சாலையை இடம் மாற்றுவது குறித்து அரசு இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்பட்டால் இங்கு செம்மொழிப் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்யும். சிறையில் உள்ள கைதிகள் அனைத்து பள்ளிப் பொதுத்தேர்வுகளையும் எழுத அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கைதிகளுக்குப் படிக்க ஆர்வம் இருந்தால் கல்லூரித் தேர்வு எழுதுவதற்குக்கூட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
14 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்து, எவ்விதப் பிரச்சினையும் இல்லாதவர்களை விடுவிக்க முதற்கட்டமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை அரசு, க்யூ பிரிவு அதிகாரிகளுடன் கலந்து பேசி யார், யாரையெல்லாம் விடுவிக்கலாம் என்று சொல்கிறார்களோ அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்புவர்கள் மீது ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. எல்லோருக்கும் பொதுவான அரசாகத்தான் இந்த அரசு செயல்படுகிறது''.
இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT