Last Updated : 18 Oct, 2021 05:28 PM

 

Published : 18 Oct 2021 05:28 PM
Last Updated : 18 Oct 2021 05:28 PM

குமரியில் தாழ்வான பகுதியில் தேங்கிய தண்ணீரால் தவிக்கும் மக்கள்: ஆற்று வெள்ளத்தில் சிக்கி மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு

பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ச்சியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நின்ற பின்னரும் மலையோரம், ஆற்றங்கரை, தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வழியாததால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆற்று வெள்ளத்தில் சிக்கி மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மழை பலி 3 பேராக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 14-ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்தது. அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கேரளாவில் பெய்த கனமழை குமரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வழிந்த நிலையில், அணைகளுக்கு அதிக நீர்வரத்தால் இரு அணைகளில் இருந்தும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டதால், ஆறு, மலையோரம், தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

குமரியை மிரட்டிய கனமழை நேற்றில் இருந்து நின்றபோதிலும் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இன்று (அக்.18) வெயில் அடித்த நிலையில் மக்கள் நிம்மதி அடைந்தனர். நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உட்பட நகர பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கின. நேற்று அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 21 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

அதேநேரம், பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 6,100 கன அடி தண்ணீர் வரும் நிலையில், நீர்மட்டம் 44.24 அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 5,892 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.59 அடியாக இருந்த நிலையில், அணைக்கு உள்வரத்தாக 3,908 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. அணையில் இருந்து 4,852 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 199 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 270 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சிற்றாறு இரண்டில் 16.11 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 123 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையில் இருந்து 123 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் கோதையாறு, பரளியாறு, வள்ளியகாறு, தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியே உருமாறிய நிலையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மழை நின்ற போதிலும் தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டிய பகுதி, கோதையாறு, பேச்சிப்பாறை, களியல், தெரிசனங்கோப்பு, குலசேகரம், மங்காடு உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் வடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை, கோதையாறு சாலை சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மலை கிராமங்களில் மழைநீர் தேங்கிய 40-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.

மாவட்டம் முழுவதம் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. அவற்றைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 9 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறும்பனையைச் சேர்ந்த நிஷான், ஜெபின் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில், மாறாமலையைச் சேர்ந்த சித்திரைவேல் என்ற தொழிலாளி காளிகேசம் ஆற்றைக் கடந்தபோது மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டார். அவரை 3-வது நாளாகத் தேடும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குலசேகரம் அருகே மடத்துவிளை கோட்டூரைச் சேர்ந்த லெனின் (30) என்ற மாற்றுத்திறனாளி நேற்று முன்தினம் மாலையில் பரளியாளற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீர் அடித்துச் சென்றது. அவர் நேற்று காலை அங்குள்ள ஆற்றங்கரை ஓரத்தில் தண்ணீரில் சிக்கி சடலமாக மிதந்தார். இதனால் குமரி மாவட்டத்தில் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 பேராக அதிகரித்தது.

கனமழையில் தேங்கிய தண்ணீர் வயல்களில் வழியாததால் அறுவடையின் இறுதிக்கட்டத்தில் இருந்த தோவாளை, வில்லுக்குறி, தக்கலை, மாம்பழத்துறையாறு பகுதியில் 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நெற்கதிர்கள் முளைத்திருந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரான ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மற்றும் அலுவலர்கள் நேற்று செண்பகராமன்புதூர், தாழக்குடி, திக்குறிச்சி பகுதிகளில் வெள்ள சேதப் பகுதிகளையும், மழையால் சேதமடைந்த வயல்வெளிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

செண்பகராமன்புதூர் பகுதியில் ஆய்வு செய்த குமரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமியிடம், மழைநீர் தேங்கி முளைத்த நெற்கதிர்களை சோகத்துடன் காண்பிக்கும் விவசாயிகள்.

அப்போது விவசாயிகள் முளைத்த நெற்கதிர்களை வயல்களில் இருந்து எடுத்து வந்து சோகத்துடன் காண்பித்தனர். மழை சேதத்தைத் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

குட்டியானை உயிரிழப்பு

குமரி மலையோரப் பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கோதை ஆற்றில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 மாத யானைக்குட்டி தண்ணீரில் மூழ்கி இறந்தது. அதன் உடல் ஆற்றில் மிதந்து வருவதை பார்த்த களியல் வனத்துறையினர் குட்டி யானையின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x