Published : 18 Oct 2021 04:05 PM
Last Updated : 18 Oct 2021 04:05 PM
திருச்சி மாவட்டத்தில் தீபாவளியையொட்டிக் கடைகளில் கரோனா விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சுகாதாரம்- மருத்துவம்- காவல்- உள்ளாட்சி ஆகிய துறை அலுவலர்கள் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள கோ-ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 42 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் திருச்சி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, வாரத்துக்கு 3 முறை சென்று டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வாரத்துக்கு 2 முறை நான் ஆய்வு செய்து வருகிறேன்.
மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகளில் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், விற்பனையாளர்கள் முகக்கவசம் இன்றி விற்பனையில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன. எனவே, கடைகளில் அரசின் கரோனா பரவல் தடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணித்து, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சுகாதாரம்- மருத்துவம்- காவல்- உள்ளாட்சி ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதால், பொதுமக்களிடத்திலும் கரோனா குறித்த விழிப்புணர்வு குறைந்து வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்’’.
இவ்வாறு ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT