Last Updated : 18 Oct, 2021 02:09 PM

2  

Published : 18 Oct 2021 02:09 PM
Last Updated : 18 Oct 2021 02:09 PM

புதிய தொழில்நுட்பம் மூலம் புதுவை கடற்கரையில் அழகிய மணல் பரப்பு

புதுச்சேரி

புதிய தொழில்நுட்பம் மூலம் புதுச்சேரி கடற்கரையில் அழகிய மணல் பரப்பு உருவாகியுள்ளதை மத்திய அமைச்சர் காணொலியில் இன்று ஆய்வு செய்தார். இதேபோல் அடுத்ததாக புதுச்சேரி சீகல்ஸ் அருகே மணல் பரப்பு உருவாக திட்டமிடப்பட்டுள்ளது.

புதுவை கடற்கரையில் மணல்பரப்பு இல்லாத சூழலில் மீண்டும் மணல் பரப்பை உருவாக்க தேசிய கடல் தொழில்நுட்ப கழகம் முடிவெடுத்தது. மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.24 கோடியில் கடற்கரை காந்தி சிலை பின்புறம் மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக இரும்பு மிதவை தலைமை செயலகம் எதிரே கடலில் அமிழ்த்தப்பட்டது.

இதனால் தற்போது செயற்கை மணல் பரப்பு உருவாகியுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் இதேபோல செயல்படுத்தப்படும் திட்டங்களை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்தர் சிங் காணொலி மூலம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்காக தேசிய கடல் தொழில்நுட்ப கழக அறிவியல் அதிகாரி சுரேஷ், தேசிய கடல் தொழில்நுட்ப கழக விஞ்ஞானிகள் பனிக்குமார், முல்லைவேந்தன், ராம்குமார், ராம்சந்தர், புதுவை அறிவியல் தொழில்நுட்ப துறை செயலர் ஸ்மித்தா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை மற்றும் துறைமுக அதிகாரிகள் நேற்று புதுவை கடற்கரைக்கு வந்தனர்.

காணொலி காட்சி மூலம் புதுவையில் உருவாக்கப்பட்டுள்ள மணல் பரப்பை மத்திய அமைச்சர் பார்வையிட்டார். மணல் பரப்பை உருவாக்கிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மத்திய அமைச்சரிடம் அடுத்தகட்டமாக மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இதுபற்றி தேசிய கடல் தொழில் நுட்ப கழக அறிவியல் அதிகாரி சுரேஷ் கூறுகையில், "நாட்டின் 75வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் புதுவையில் உருவாக்கப்பட்டுள்ள கடற்கரை மணல்பரப்பு திட்டத்தை அமைச்சர் ஜிதேந்தர்சிங் காணொலியில் பார்வையிட்டார்.

புதிய தொழில்நுட்பம் மூலம் தலைமை செயலகம் எதிரே 975 டன் இரும்பு மிதவை கடலில் அமிழ்த்தப்பட்டுள்ளது. இது தேவையான மணலை கடற்கரையில் சேர்க்கும். குருசுகுப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும்.

துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரப்படும் மணலும் கடற்கரையில் கொட்டப்படுகிறது.

இதனால் கடந்த காலத்தில் இருந்ததுபோல அழகிய கடற்கரை மணல்பரப்பு உருவாகியுள்ளது. அடுத்தகட்டமாக சீகல்ஸ் அருகே இரும்பு மிதவையை கடலில் அமிழ்த்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. " என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம் தலைமைச்செயலகம் போல் இப்பகுதியிலும் மணல்பரப்பு உருவாகும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x