Last Updated : 18 Oct, 2021 01:05 PM

 

Published : 18 Oct 2021 01:05 PM
Last Updated : 18 Oct 2021 01:05 PM

5 ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலக வாடகையைச் செலுத்தாத சட்டப்பேரவைச் செயலகம்: புதுவை முதல்வரிடம் புகார்

புதுச்சேரி

ஐந்து ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகத்துக்கான வாடகையைப் புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகம் செலுத்தாமல் ரூ.6.64 லட்சம் வாடகை பாக்கியை உழவர் கரை நகராட்சிக்கு வைத்துள்ளது. இதுகுறித்து புதுவை முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அங்காடியில் எம்எல்ஏ அலுவலகத்தை அமைத்துவிட்டு, அதை இடம் மாற்றாமல், வாடகையும் செலுத்தாமல் இருப்பது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி மனுத்தாக்கல் செய்தார்.

அதில் கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக அவர் கூறியதாவது:

’’புதுச்சேரி உழவர்கரை அஜீஸ் நகர் அங்காடியில் இரு கடைகளை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை உழவர்கரை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மாத வாடகை ரூ.11,450 என நிர்ணயம் செய்யப்பட்டு, அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் இதனை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். ஆனால், இந்த அலுவலகம் செயல்படத் தொடங்கிய நாள் முதலே உழவர்கரை நகராட்சிக்கு சட்டப்பேரவைச் செயலகம் வாடகை செலுத்தாமல் இருந்தது. இதுவரை ரூ.6.64 லட்சம் வாடகை பாக்கி உள்ளது.

நகராட்சி ஆணையர் கடிதம் அனுப்பியும் சட்டப்பேரவைச் செயலகம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், சட்டப்பேரவைச் செயலர், பேரவைத் தலைவரின் அறிவுறுத்தலின்படி இடத்தை 19 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தம் கேட்டு நகராட்சிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதையடுத்து நகராட்சி ஆணையர், சட்டப்பேரவைச் செயலருக்குப் புதிய கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், வாடகையை ரூ.12,595 ஆக உயர்த்தியுள்ளதுடன் அலுவலகத்தைச் சீரமைக்க நகராட்சியிடம் நிதியில்லை, சட்டப்பேரவைச் செயலகமே அலுவலகத்தைச் சீரமைக்கலாம் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் ஐந்து ஆண்டுகளாக வாடகை நிலுவையை வசூல் செய்ய எவ்வித நடவடிக்கையையும் உழவர்கரை நகராட்சி எடுக்கவில்லை.

நகராட்சி அலுவலகமும், சட்டப்பேரவைச் செயலகமும் வாடகை ஒப்பந்தம் செய்யாமலேயே, தற்போதைய எம்எல்ஏ தனது பெயர்ப் பலகையை அமைத்துள்ளார். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய சட்டப்பேரவைச் செயலகமும், நகராட்சியும், அதுபோல் இருக்கவில்லை. முதலில் நிலுவைத் தொகையைச் சட்டப்பேரவைச் செயலகத்திடம் வசூலித்துவிட்டு, பின்னர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வாடகைக்கு விடவேண்டும் என்று முதல்வர், அரசு செயலர்களுக்கு மனு தந்துள்ளேன்."

இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x