Published : 18 Oct 2021 10:28 AM
Last Updated : 18 Oct 2021 10:28 AM

வரலாற்று ஆவணங்களை விற்பது தேச துரோகம்; பிரசார் பாரதி முடிவை கைவிட வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

வரலாற்று ஆவணங்களை ஏலம் விடும் முடிவை பிரசார் பாரதி அமைப்பு கைவிடுமாறு வலியுறுத்தி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மேலும், கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு என்று அவர் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அக்கடிதத்தின் விபரம் வருமாறு.

“தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு (அக்:8) முடிவெடுத்துள்ளது.

இவர்கள் ஏலம் விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும்.

நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.

இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்கக் கூடும். ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது.

இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை "பணமாக்க" போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது. இப்படித் தரப்படும் உரிமைகளில் "தனி உரிமைகளும்" (Exclusive rights) அடக்கம்.

இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல. சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை.

கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு.

ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x