Published : 18 Oct 2021 07:58 AM
Last Updated : 18 Oct 2021 07:58 AM
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பல நாட்களாக தூர்வாரப்படாமல் கிடந்த கழிவுநீர் வாய்க்கால்களை, அப்பகுதி இளைஞர்களே தாமாக முன்வந்து சுத்தம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக அமைக்கப்படவில்லை. மேலும் பல ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. இதனால் கழிவு நீர் வாய்க்காலில் மண் தூர்ந்து, அடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அடைத்துக் கொண்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி, துர்நாற்றம் வீசியது.
மாரியம்மன் கோவில் வீதி, முன்னடி வீரன் கோவில் வீதி, தண்ணீர் தொட்டி வீதி, இந்திரா நகர், பனங்காடு பகுதி போன்ற இடங்களில் கழிவுநீர் செல்ல முடியாமல் அப்படியே தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது.
இதேபோல் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட போதிய குப்பை தொட்டிகள், இடங்கள் இல்லாததால் சாலைகளிலும், தெரு முக்குகளிலும், தாங்கல் ஓரங்களிலும் கொட்டப்பட்டு வருகிறது. இவற்றில் கோழி, காக்கா போன்ற பறவைகள் இறைத்தேடுவதால் குப்பைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அவல நிலையும் உள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதியுறுவதோடு, பல்வேறு இன்னலுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த கழிவுநீர் மற்றும் குப்பைகளால் குடும்ப சண்டைகளும் ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்யக் கோரி கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அரசுக்கு பல்வேறு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிகாரிகள் அலட்சியம் காட்சி வருகின்றனர்.
இந்நிலையில் கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாங்களே கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார முடிவெடுத்தனர்.
அதன்படி நேற்று (அக். 17) ஒன்று சேர்ந்த இளைஞர்கள் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்தனர். இது பற்றி இளைஞர்கள் கூறும்போது,
‘‘கிருமாம்பாக்கம் பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. முறையாகவும் அமைக்கவில்லை. இதனால் ஆங்காங்கே வாய்க்கால்கள் உடைந்து கிடக்கிறது.
பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தற்போது கரோனா பெருந்தொற்றினால் பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையில், டெங்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளது.
இத்தச் சூழ்நிலையில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், அதிலிருந்து உருவாகும் கொசுக்களினால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே தூர்வாரப்படாத கழிநீர் வாய்க்கால்களை நுண்ணறிவுடன் செயல்பட்டு விரைந்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT