Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM
திருவான்மியூர் ரங்கநாதபுரத்தில் பக்கிங்காம் கால்வாயில் பொதுப்பணித் துறை அனுமதி இல்லாமல் டிஎன்டிஆர்சி நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவான்மியூர் ரங்கநாதபுரம், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மி்கவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிந்ததால் இப்பகுதி குடியிருப்புகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. அதனால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பக்கிங்காம் கால்வாயில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாயில் பக்கவாட்டுச் சுவர்கள் கட்டப்படுகின்றன. அதற்காக ஏற்கெனவே இருந்த பக்கவாட்டுச் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இது, நீர் நிலைகளில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான செயலாகும் என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிட்லபாக்கம் ஏரி மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் குப்பைகள், கட்டிட இடிபாடுகளைக் கொட்டுவது, கழிவுநீர் கலப்பது போன்றவற்றை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். நீர் நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பாக விரைவில் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அண்மையில் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, “நீர் நிலைகளைப் பாதுகாக்க விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தது. அத்துடன், பக்கிங்காம் கால்வாயை ரூ.1,000 கோடியில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செய்ய பொதுப்பணித் துறை திட்டமிட்டு இந்தாண்டு இறுதியில் பணிகள் தொடங்கவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் இக்கால்வாயில் பொதுப்பணித் துறை அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வலர் ஓ.உன்னிகிருஷ்ணன், “இந்த சட்டவிரோத கட்டுமானம் குறித்து பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை செயலாளர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தேன்.
ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளருக்கும் மனு அனுப்பினேன். அத்துடன், கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் (திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் - எஸ்ஆர்பி டூல்ஸ் இடையே) பக்கிங்காம் கால்வாயின் அகலத்தைக் குறிக்கும் கள அளவீட்டு வரைபடம், பக்கிங்காம் கால்வாயில் டிஎன்டிஆர்சி நிறுவனம் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளைத் தடுக்க பொதுப்பணித் துறை எடுத்துள்ள நடவடிக்கை உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியுள்ளேன்” என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “மேற்கண்ட கட்டுமானம் குறித்து பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெறவில்லை. அதற்கான ஆவணங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. எனவே, அந்த கட்டுமானம் பற்றி விளக்கம் அளிக்கும்படி டிஎன்டிஆர்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT