Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் புதூரில் ஆண்டுக்கு 21 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ப்பு: ஊராட்சிகளின் தேவைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்

புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நர்சரி கார்டனை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிவலார்பட்டி ஊராட்சி வேலை உறுதி திட்டப் பணியாளர்கள்.

கோவில்பட்டி

கிராமப்புற மக்களின் வாழ்வாதா ரத்தை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகள் உட்பட இந்தியாவில் உள்ள 2.39 லட்சம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது போன்ற விமர்சனங்கள் இருந்தாலும், வானம் பார்த்த பூமியான மானாவாரி நிலங்கள் உள்ள பகுதிகளில் விவசாய பணிகள் இல்லாத காலங்களில் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்துக்கு இத்திட்டம் கைகொடுக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் புதூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களைக் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் நர்சரி கார்டன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முழுவதும் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

சிவலார்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அலங்கார வாகை, சுருள் தேக்கு, மஞ்சள் கொண்டை, இயல் வாகை, புளி, வேம்பு, பூவரசு, தூங்கு மூஞ்சி வாகை, மருத மரம், புங்கை, கொய்யா, பப்பாளி, நவாப்பழம், வாதாங்கொட்டை என, 14 வகை மரக்கன்றுகள் வளர்க்கின்றனர்.

சுமார் 2 அடி உயரம் வளர்ந்தவுடன், புதூர் வட்டாரத்தில் உள்ள 44 ஊராட்சிகளுக்கும், அந்தந்த தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதியுடன் தேவையான மரக்கன்றுகளை அனுப்பி வைக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில், ஆண்டுக்கு 21 ஆயிரம் என, சுமார் 63 ஆயிரம் மரக்கன்றுகள் ஊராட்சிகளுக்கு தரப்பட்டுள்ளன.

இடம், தண்ணீர் வசதி

இதுகுறித்து புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எல்.நவநீத கிருஷ்ணன் கூறும்போது, “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இங்கு பணிபுரிந்த சிவன்ராஜ் என்பவர் மரக்கன்றுகள் வளர்ப்பில் ஆர்வமாக இருந்தார்.

தற்போது சரவண முருகன் இதனை கவனித்து வருகிறார். புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான இடம் மற்றும் தண்ணீர் வசதி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மரக்கன்றுகளை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நட்டு வருகிறோம்” என்றார்.

மழை மறைவு வட்டாரம்

கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “மழையின் காதல னாக மரங்களை கருதுகிறோம்.

மரம் இருந்தால் தான் மழைப்பொழிவு இருக்கும். ஏற்கெனவே புதூர் வட்டாரத்தை வானிலை அதிகாரிகள் மழை மறைவு வட்டாரம் என்று பெயரிட்டுள்ளனர். இதனை மாற்றி பசுமை புரட்சியை உருவாக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x