Published : 17 Oct 2021 06:33 PM
Last Updated : 17 Oct 2021 06:33 PM
உலகளாவிய மதமாக கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது. இந்து மதம் உலக மதமாக மாறாதது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் இயற்கை மருத்துவம் தொடர்பான சிசிச்சை மையத்தைப் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பங்கேற்றார்.
இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’தமிழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மருத்துவமனைகள் அதிகரிக்கின்றன. இந்திய அரசு இயற்கை மருத்துவத்திற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இயற்கை மருத்துவர்களுக்கான வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும். ஆங்கில, இந்திய மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையில், இயற்கை மருத்துவம் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவுகளை அனுமதிக்க வேண்டும்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவைச் சேர்க்கவேண்டும் இயற்கை மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு அளித்தால் அறுவை சிகிச்சைகள் குறையும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 9 மாவட்டம் என்றாலும் இந்த முடிவு, ஒவ்வொரு கட்சியின் பலத்தைக் காட்டியுள்ளது. அதிமுக சரிவைச் சந்தித்துள்ளது. திமுகவின் 4 மாத நல்லாட்சிக்கு மக்கள் நற்சான்று வழங்கியுள்ளனர். மாநில அளவிலான எஸ்சி, எஸ்டி ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. எங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர்ந்து போராடுகின்றனர். இதுகுறித்து முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். மத்திய அரசின் திட்டங்களைக் கண்காணிக்கும் குழுவிலும், மாநில வளர்ச்சி கண்காணிப்புக் குழுவிலும் இடம் பெற்றுள்ளேன்.
சமூக நீதி அரசியலைப் பேசும் மண்ணில் சனாதான சக்திகளுக்குத் துணை போகும் வகையில் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என, ஏற்கனவே சீமானுக்கு சுட்டிகாட்டியுள்ளேன். மதம் வேறு, ஆன்மீகம் வேறு. மதம் நிறுவனம், ஆன்மீகம் உணர்வு. எதிர்பாராத வகையில் நாம் தமிழர் கட்சி, அரசியல் சனாதானவாதிகளுக்கு துணை போகிறது.
உலகளாவிய மதமாக கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது, இந்து மதம் உலக மதமாக மாறவில்லை ஏன்? இந்து மதம் சார்ந்த தலைவர்கள் சிந்திக்கவேண்டும். அரசியல் மனிதநேயம், சாதியின் பெயரால் பிரிவுகள் கொண்ட மதமாக இந்து மதம் உள்ளதால் உலக நாடுகள் ஏற்கவில்லை. ஆர்எஸ்எஸ்காரரர்கள் எங்களுக்கானவர் என்று கூறுவது போல சீமானின் செயல்பாடு மாறிவிட்டது.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது ஜனநாயகம் மற்றும் நாட்டிற்கு பாதுகாப்பு இல்லை. நாட்டை எவ்வாறு காப்பாற்றுவது என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2024ல் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைவரும் ஒண்றினைய வேண்டும். சசிகலா அரசியல் வருகை என்பது அவரது தனிப்பட்ட உரிமை, விருப்பம். அதுகுறித்துக் கருத்துச்சொல்ல எதுவுமில்லை’’.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT