Published : 17 Oct 2021 05:05 PM
Last Updated : 17 Oct 2021 05:05 PM
அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படவுள்ள சிறைவாசிகளில், வெடிகுண்டு வழக்கு, தேச துரோக வழக்கு, கொடுங்குற்றங்கள் ஆகியவற்றில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்தியச் சிறையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பிறகு சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:
''திருச்சி மத்தியச் சிறையில் 1,517 சிறைவாசிகள் உள்ளனர். நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் திருச்சி மத்தியச் சிறை ஆகிய 2 சிறைகளில்தான் தொழிற்பயிற்சி நிலையம் (ITI) உள்ளது. மேலும், 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறது. மேலும் விரும்புவோர் கல்லூரிப் படிப்பு படிக்கவும் வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது.
ஆய்வின்போது உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் போதிய அளவில் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைவாசிகள் எங்களிடம் தெரிவித்தனர். சிறைவாசிகளின் பாதுகாப்பில் அக்கறையுடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
தண்டனைக் காலம் முடிந்தவர்களை சிறப்பு முகாமில் தங்க வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தண்டனைக் காலம் முடிந்து பிறகும் வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளதற்கு பாஸ்போர்ட் இல்லாதது, நாடு திரும்ப விருப்பமின்மை, சொந்த நாட்டில் ஆபத்து உட்படப் பல்வேறு காரணங்கள் இருக்கும்.
சிறைக் காவலர்களுக்கு கூடுதல் பணி நேரப் படியை உயர்த்தித் தருவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்ய முடியாது. வெடிகுண்டு வழக்கு, தேசத் துரோக வழக்கு, கொடுங்குற்ற வழக்கு ஆகியவற்றில் தண்டனை பெற்றவர்களைத் தவிர்த்துவிட்டு, எஞ்சியவர்களின் பட்டியலைத் தயார் செய்து, நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். முதல்வரின் அறிவிப்புக்குப் பிறகுதான் விடுதலை செய்வதற்குத் தகுதியான சிறைவாசிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பட்டியலைத் தயார் செய்ய இன்னும் 15, 20 நாட்களுக்கு மேலாகும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பரிசீலனை செய்யப்படும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் பிற அரசியல் கட்சிகளைவிடத் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார். அதை லட்சியமாகவும், கடமையாகவும் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர்களது விடுதலைக்குத் திமுக அரசு முழு முயற்சி மேற்கொள்ளும்.
கரோனா காலத்தில் சிறைவாசிகளை உறவினர்கள் சந்திக்க முடியாத நிலை இருந்ததால், வீடியோ கான்பரன்சிங் மற்றும் செல்போன் மூலம் பேசுவதற்கு வாய்ப்பை உருவாக்கித் தரப்பட்டது. சிறைவாசிகள் கள்ளத்தனமாக செல்போன்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சிறைகளில் நவீன ஜாமர் கருவிகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து 2 நாட்களுக்கு முன் ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது''.
இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது திருச்சி சரக சிறைத் துறை டிஐஜி இரா.கனகராஜ், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் மா.ஊர்மிளா, மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT