Published : 17 Oct 2021 01:56 PM
Last Updated : 17 Oct 2021 01:56 PM
மின்சாரத்தின் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்கு கொள்முதல் செய்யப்படுவது மின்வாரியத்தை நலிவடையச் செய்து விடும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க வெளிச்சந்தைகளில் இருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மின் வாரியம் தள்ளப்பட்டிருக்கிறது. உற்பத்திச் செலவை விட 5 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவது மின்வாரியத்தை நிலைகுலையச் செய்து விடும்.
தமிழ்நாட்டின் அதிகபட்ச மின்சாரத் தேவை கடந்த சில நாட்களாக 13,500 மெகாவாட் என்ற அளவில்தான் உள்ளது. ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைவுதான். ஆனால், தமிழ்நாட்டின் மின்னுற்பத்தியும், மின்சாரம் வழங்கி வந்த தனியார் நிறுவனங்களின் மின்னுற்பத்தியும் கணிசமாகக் குறைந்துவிட்ட நிலையில், கடுமையான மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைத் தவிர்ப்பதற்காக தமிழ்நாடு அரசு, கடந்த சில நாட்களாக வெளிச்சந்தையிலிருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக 2,850 மெகாவாட் வரை மின்சாரம் வாங்கப்பட்டிருக்கிறது. கடந்த 14-ஆம் தேதி ஒரு யூனிட் மின்சாரம் ரூ.17.77 முதல் ரூ.20.00 வரையும், 15-ஆம் தேதி ஒரு யூனிட் மின்சாரம் ரூ.12.98 முதல் ரூ.20.00 வரையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.4.87 மட்டும்தான். புனல் மின்சாரம் 77 பைசாவுக்கும், எரிவாயு மின்சாரம் ரூ.2.81-க்கும் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின்சாரத்தின் உற்பத்திச் செலவை விட 5 மடங்குக்கும் கூடுதலான விலை கொடுத்து மின்சார சந்தையில் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் சில காலம் நீடித்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் சீர் செய்ய முடியாத அளவுக்கு நிலைகுலைந்து விடும். இது மிகப்பெரிய பின்னடைவாகும்.
தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. அவ்வாறு மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டால்கூட அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டில் இத்தகைய சூழல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் கடந்த 20 நாட்களாகவே இருந்து வந்தன. எனினும், தமிழகத்தில் போதிய அளவு நிலக்கரி இருப்பதால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது; ஒரு வினாடி கூட மின்வெட்டு ஏற்படாது என்பதையே மின்சாரத்துறை அமைச்சர் மீண்டும், மீண்டும் தெரிவித்து வந்தார்.
தமிழ்நாட்டில் மின்னுற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருந்தாலும், எந்தெந்த வழிகளில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதை கடந்த 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் விளக்கியிருந்தேன். ‘‘நிலக்கரி இறக்குமதி குறைந்து விட்டதால் தனியார் நிறுவனங்களின் மின்சார உற்பத்தி பெரிதும் குறைந்து விட்டது. அதனால் தனியாரிடமிருந்து சராசரியாக 4000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது 1500 மெகா வாட்டுக்கும் குறைவான மின்சாரத்தையே கொள்முதல் செய்கிறது.
அதனால் ஏற்படும் பற்றாக்குறையை காற்றாலை மின்சாரம்தான் ஈடு செய்கிறது. வழக்கமாக காற்றாலை மின்னுற்பத்தி அக்டோபர் மாதத் தொடக்கத்தில் குறைந்து விடும். ஆனால், நல்வாய்ப்பாக காற்றாலை மின்சாரம் இப்போதும் அதிகமாக கிடைக்கிறது.. நேற்று கூட 6 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைத்துள்ளது. இதே நிலை எப்போதும் நீடிக்காது. ஒருவேளை அடுத்த சில நாட்களில் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்தாலும், தனியார் நிறுவனங்கள் வழங்கும் மின்சாரம் குறைந்தாலும் தமிழகம் மின்தட்டுப்பாட்டை சந்திக்கும் ஆபத்துள்ளது’’ என்று எச்சரித்திருந்தேன். என்ன நடக்கும் என நான் எச்சரித்திருந்தேனோ, அதுதான் நடந்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி 7 கோடி யூனிட்டாக இருந்த காற்றாலை மின்னுற்பத்தி, நேற்றைய நிலவரப்படி 2.30 கோடி யூனிட்டாக குறைந்து விட்டது. சூரிய ஒளி மின்னுற்பத்தியும் 2 கோடியிலிருந்து 1.2 கோடி யூனிட்டாக குறைந்து விட்டது. இனிவரும் நாட்களில் காற்றாலை, சூரிய ஒளி மின்சார உற்பத்தி மேலும் குறையும். அப்போதும் வெளிச்சந்தைகளில் இருந்து மின்சாரத்தை உடனடிக் கொள்முதல் முறையில் வாங்கினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். மின் தட்டுப்பாடு எந்த அளவில் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, போதிய முன்னேற்பாடுகளை செய்யத் தவறியதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிகவும் அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டில் 2500 மெகாவாட் அளவுக்கு மின்தட்டுப்பாடு இருப்பதை மின்சாரத்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.61 என்ற விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி வருகிறார். ஆனால், களச்சூழலின் அவசரத்திற்கு ஏற்ப அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. ஒரு யூனிட் அனல் மின்சாரம் ரூ.2.61க்கு கிடைத்தால் அது அரசுக்கு லாபம்தான்; ஆனால், கிடைக்குமா? என்பது தெரியவில்லை.
தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே ரூ.1.59 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. மின்சார வாரியத்தின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இந்தக் கடனையும், மின்சார வாரியத்தின் இழப்பையும் குறைக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அதிகரிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. அதற்கேற்ற வகையில் இப்போதைய மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்கவும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT