Published : 17 Oct 2021 11:07 AM
Last Updated : 17 Oct 2021 11:07 AM
கரூர் மாநகராட்சியாக மாறுவதால் வரிகள் உயருமா என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் நகராட்சியில் ஒரு நாள் ஒரு வார்டு திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சி 27வதுவார்டு வையாபுரி நகர் பகுதியில் சாக்கடைக் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை இன்று (அக். 17) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி காலை 6 மணிக்கு நடைபயிற்சி ஆய்வு மூலம் பார்வையிட்டார். அப்போது பொதுமக்களைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, வையாபுரிநகர் முதல் குறுக்குத்தெருவில் சாலையோர டீக்கடையில் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தியுடன் பெஞ்சில் அமர்ந்து டீ குடித்தார். அதன்பிறகு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். வையாபுரிநகர் முதல் குறுக்குத்தெருவில் உள்ள சந்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சரை பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ’’நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் கரூர் மாநகராட்சியாகச் சந்திக்கும். கரூர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். கரூர் நகராட்சியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் நகராட்சியில் பல ஆண்டுகளாக சாக்கடைக் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் 2 முதல் இரண்டரை அடிவரை மணல் சேர்ந்துள்ளது. இவற்றைப் போர்க்கால அடிப்படையில் அகற்றி மழைநீர் சீராகச் செல்ல மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தவேண்டிஉள்ளது. கரூர் மாநகராட்சியாக மாறுவதால் வரிகள் உயரும் என்ற விஷமப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
நகராட்சி மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் உயர்வதால் 1 பைசா கூட வரி உயராது. தமிழக அளவில் பொதுவாக மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு வரி உயரும்போது உயரும். அதற்கு முன் எந்த வரியும் உயராது.
கரூரில் நகரில் ஓடும் இரட்டை வாய்க்கால்களில் தற்போது கழிவு நீர் கலக்கிறது. ஆனால் அமராவதி ஆற்றில் வரும் தண்ணீர் இரட்டை வாய்க்கால்களில் செல்லும் முன்பு மக்கள் அதனைப் பயன்படுத்தி வந்தனர். அமராவதி ஆற்றைத் தூர்வாரும் திட்டம் செயல்படுத்தப்படும். அப்போது கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும்.
ஒரு நாள் ஒரு வார்டு திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சியில் சாக்கடை தூர்வாரும் பணிகள், தெருவிளக்கு அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி தேவைப்படுகிறது. அவற்றைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என்று அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
அப்போது கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா, பொறியாளர் கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT