Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM
இந்திய ரயில்வேயில் கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 8,372 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 3,742 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
ரயில்வேயில், ரயில் விபத்துகள் மற்றும் ரயில்வே கிராசிங் விபத்துகள் என்று 2 வகையாக விபத்துகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில்,ரயில் விபத்துகளால் இறப்பு தற்போது குறைந்துவருகிறது. ஆனால், ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி வாகனங்கள் மூலம் ரயில் பாதைகளைக் கடந்து செல்வது, செல்போன் பேசிக் கொண்டே பாதைகள் அருகே நடந்து செல்வது, சிக்னல் விதிகளை மீறுவது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து, விதிமுறைகள் மீறப்படுவதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களுக்கு சுற்றுச்சுவருடன் நவீன கேட்கள் அமைத்தல், சுரங்கப்பாதைகள் அமைத்தல், மேம்பாலம் கட்டுதல், தடுப்பு சுவர்கள் அமைத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், பாதுகாப்பு விதிகளை மீறப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 8,372 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 3,742 பேர் ரயில் தண்டவாளங்களைக் கடக்கும்போது உயிரிழந்துள்ளனர். மேலும், 1,078 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்களின் கவனக்குறைவு
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில்பாதைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமீபகாலமாக ரயில்பாதையில் ஏற்படும் இறப்புகளுக்கு செல்போன் பேசிக் கொண்டே தண்டவாளத்தைக் கடந்து செல்லுதல், தண்டவாளம் அருகே அமர்ந்து மது அருந்தி மயங்கி விழுதல் உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக உள்ளன. தண்டவாளங்கள் அருகே அமர்ந்து மதுஅருந்துவதைத் தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக்கடைகளை மூட வேண்டும் என்று ரயில்வே சார்பில் தமிழக அரசிடம் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம்’’ என்றனர்.
ரயில் ஓட்டுநர்கள் சிலரிடம் இதுதொடர்பாகக் கேட்டபோது, ‘‘ரயில்வேயில் புதிய வகை ரயில் இன்ஜின்கள் அதிகளவில் இணைக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பத்தால் ரயில்நிலையங்களில் இருந்து ரயில்கள் புறப்படும்போது அடுத்த சில நொடிகளில் வேகமெடுக்கின்றன. முன்பெல்லாம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு ஒரு நிமிடத்துக்குப் பிறகுதான் வேகமாக செல்லும். தற்போது அதிகபட்சமாக 30 - 40 நொடிகளில் ரயில் நிலையத்தையே கடந்து விடுகிறது. இதனால், தண்டவாளங்களை கவனக்குறைவாக கடந்தாலோ, ஓடி வந்து ரயில்களில் ஏற முயற்சித்தாலோ விபத்துகள் ஏற்படுகின்றன’’ என்றனர்.
விபத்து குறித்த புள்ளி விவரம்
2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை இந்திய ரயில்வே கணக்குப்படி மொத்தம் 8,372 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து உள்ளிட்ட காரணத்தால் ரயில் பயணிகள் 2,897 பேரும்,தண்டவாளங்களைக் கடக்கும்போது பொதுமக்கள் 3,742 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்கொலையால் 813 பேரும், இதர காரணங்களால் 895பேரும் உயிரிழந்துள்ளதாக ரயில்வேத் துறை யின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தெற்கு ரயில்வேயின் தமிழகப் பகுதிகளில் தண்டவாளங்களைக் கடந்து செல்லும்போது ரயில்கள் மோதி 2020-ல் 629 பேரும், 2021 ஜூன் வரை 496 பேரும் இறந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT