Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM
காஞ்சிபுரத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அத்திவரதர் போன்ற உருவச் சிலை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. இந்த உருவச் சிலை தற்போது மூன்றாவது ஆண்டாக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள், உள்ளூர் மக்கள் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த சரஸ் குளத்தில் இருந்த அத்திவரதர் 40 ஆண்டுகள் கழித்து வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விழா உலக அளவில் பிரசித்தி பெற்ற விழாவாக மாறியது. தினம்தோறும் 3 லட்சம் பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்தனர். இந்த கூட்ட நெரிசலில் முதியோர், குழந்தைகள் பலர் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை.
இந்நிலையில் இவர்களுக்காக விழா முடிந்ததும் புரட்டாசி மாதத்தில் முதல் முறையாக பாண்டவதூத பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ள பொய்யாமுடி விநாயகர் கோயிலில் அத்திவரதர் சிலையின் மாதிரி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு நின்ற கோலத்தில் வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் வைக்கப்பட்டது. அத்திவரதரை தரிசிக்க முடியாத உள்ளூர் மக்கள் பலர் வந்து இச்சிலையை தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ஆண்டாக சயன கோலத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று வைக்கப்பட்ட இந்தச் சிலை 3 நாட்கள் இருக்கும். இதன் பிறகு எடுக்கப்படும். இனிமேல் 5 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அத்திவரதர் வைக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறும்போது, “40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வைபவம் நடைபெறுவதால் இது குறித்துபலருக்கு தெரியாமல் போய்விடுகிறது. இதனை அடிக்கடி நினைவூட்டவும், இந்த விழாவின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ளவும் இந்தச் சிலை வைக்கப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT