Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM
திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.45 கொடுத்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என கொள்முதல் நிலைய பணியாளர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 1.37 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் சுமார் 300 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த அக்.1-ம் தேதி தொடங்கி நேற்று வரை 55,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.45 வரை முன்கூட்டியே கொடுத்தால் மட்டுமே விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், கொள்முதல் நிலையங்களில் எவ்வித கையூட்டும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்படும் என எம்எல்ஏக்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதும் பழைய நிலையே தொடர்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தம்புசாமி கூறியது:
நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு ஏற்றி வரும் லாரிகளுக்கு தலா ரூ.500, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குக்கு ஏற்றிச்செல்லும் லாரிக்கு ஒரு லோடுக்கு ரூ.1,500, பார்வையிட வரும் அதிகாரிகளின் கார் வாடகை ரூ.1,000 மற்றும் குறைவான சம்பளம் காரணமாக கொள்முதல் ஊழியர்கள், லோடுமேன்களிடம் நிலவும் எதிர்பார்ப்பு போன்ற அனைத்துக்கும் சேர்த்து, விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.45 வசூலித்து வருகின்றனர். இத்தகைய கையூட்டு விவசாயிகளுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்றார்.
பெருகவாழ்ந்தான் விவசாயிகள் கூறியது: தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், அறுவடை நிலையில் உள்ள நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்துவிட்டன. அவற்றை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்து, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தாலும் ஈரப்பதத்தைக் காரணம் காட்டி கொள்முதல் செய்ய ஊழியர்கள் மறுக்கின்றனர். பின்னர், கொள்முதல் நிலையத்திலேயே கொட்டிவைத்து பாதுகாத்து, உலர்த்திக் கொடுத்தாலும் மூட்டை ஒன்றுக்கு ரூ.45 கேட்கின்றனர்.
இதனால் சிறுகுறு விவசாயிகள் பெருத்த நஷ்டமடைவோம். கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதால், விவசாயிகள் நஷ்டமடைவதை அனுமதிப்பது சரிதானா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அ.கோ.ராஜராஜன் கூறியது:
கையூட்டு நடைமுறை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என ஊழியர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். பெருகவாழ்ந்தான் உட்பட அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும். விவசாயிகளிடம் தவறான அணுகுமுறையில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT