Published : 16 Oct 2021 07:24 PM
Last Updated : 16 Oct 2021 07:24 PM
சென்னை கே.பி.பார்க் குடியிருப்பில் பயனாளிகள் பங்களிப்புத் தொகை ரூ.1.50 லட்சத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் குடியிருப்பின் கட்டிடத் தரம் குறித்த ஐஐடி ஆய்வுக்குழுவின் அறிக்கையை முழுமையாக வெளியிடவும் மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஊரகத் தொழில்துறை மற்றும் குடிசைமாற்று வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
’’சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா (கே. பி பார்க்) பகுதியில் பழுதடைந்த குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளை இடித்து விட்டு 864 புதிய குடியிருப்புகளைக் கட்டித்தருவதற்காக 2018ஆம் ஆண்டில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய குடியிருப்புகள் கட்டப்படும் வரை அந்த குடியிருப்புகளுக்கு அருகாமையில் தகர க்கொட்டகையில் மக்கள் வசிக்க தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தற்காலிக ஏற்பாடு செய்து கொடுத்தது.
மேற்படி 864 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்குக் குடியிருப்புகளை ஒதுக்காமல் காலம் தாழ்த்திய அதிமுக அரசை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர் இயக்கம் நடத்தி வந்தது. இத்தகைய தொடர் முயற்சிகளுக்குப் பிறகே, 2020 பிப்ரவரி 5ஆம் தேதி 864 வீடுகளுக்கான டோக்கன் குலுக்கலில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், புதிய குடியிருப்புகளில் குடியேறுவதற்குத் தயாராக இருக்கும் மக்களுக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கோட்டம் - 3 சார்பில் கே.பி.பார்க் திட்டப்பகுதி, பகுதி-1, 864 குடியிருப்பு ஒதுக்கப்பட்டவர்களுக்கு அரசு உத்தரவின்படி தங்களது பங்களிப்புத் தொகையாக ரூபாய்.1,50,000 வாரியத்திற்குச் செலுத்த வேண்டும் என அறிவித்தது.
குடிசைமாற்று வாரிய மேலாண்மை இணை இயக்குநர் இளம்பகவத்தை 2021 ஜூன் 21ஆம் தேதி நேரடியாகச் சந்தித்து ரூ.1.50 லட்சம் தொகையை கட்ட வேண்டும் என்பதை ரத்து செய்திட வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இயக்குநர் துறைச் செயலாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், 864 கட்டிடங்கள் தரமற்று இருப்பதாகத் தமிழக அரசு உணர்ந்து அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக ஆய்வுக் குழுவை நியமித்தது. அக்குழு கே.பி.பார்க் குடியிருப்பு கட்டுமானம் தரமற்று இருப்பதாக அரசுக்கு கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இச்சூழலில், தமிழக அரசு கே.பி.பார்க் கட்டிடம் குறித்து ஆய்வுக்குழு சமர்ப்பித்த அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டுமெனவும், மேலும் கே.பி.பார்க் 864 குடியிருப்புகளில் குடியேற ரூ.1.50 லட்சம் கேட்பதை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’’.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment