Published : 16 Oct 2021 05:24 PM
Last Updated : 16 Oct 2021 05:24 PM

கர்ப்பிணியை அலைக்கழித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: உடுமலை அரசு மருத்துவர் கூடலூருக்கு மாற்றம்

திருப்பூர்

கர்ப்பிணியை அலட்சியமாக சிகிச்சை அளித்ததாகவும், தனியார் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறி திருப்பூர் ஆட்சியருக்குப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடுமலை அரசுப் பெண் மருத்துவர் தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவைச் சேர்ந்தவர் மருதமுத்து (33). தேங்காய் வெட்டும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (24) . தம்பதியருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் ராஜராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்தார்.

இதற்காக கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த 23-ம் தேதி ராஜராஜேஸ்வரிக்கு திடீரென வலி ஏற்பட, அவரை ஸ்கேன் எடுக்குமாறு அங்கிருந்தவர்கள் அறிவுறுத்தினர். தொடர்ந்து தனியார் மையத்தில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்தனர். அப்போது கருவில் இருக்கும் சிசு உயிரிழந்துவிட்டதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராஜராஜேஸ்வரி சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை அளிக்க அங்கிருந்தோர் தாமதப்படுத்தியாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கிருந்த பெண் மருத்துவர் ஜோதிமணியிடம் தெரிவித்தபோது, அவர் எவ்விதத் தகவலும் சொல்லாமல் இருந்து வந்ததாக மருதமுத்து குற்றஞ்சாட்டினார். இதனால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், ரூ. 35ஆயிரம் முன் பணம் கட்டி, ஒரு மணிநேரத்தில் இறந்த நிலையில் பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சை மேற்கொண்டது பெண் மருத்துவர் ஜோதிமணி எனத் தெரியவந்ததால், அதிர்ச்சியடைந்தார் மருதமுத்து.

இந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த அவல நிலை குறித்தும் மருத்துவர் ஜோதிமணி நடந்துகொண்ட விதம் குறித்தும் ஆட்சியர் சு.வினீத்துக்கு காரத்தொழுவைச் சேர்ந்தவர்கள் மனு அனுப்பினர்.

மனுவைப் பெற்ற ஆட்சியர் உடனடியாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் த.கி.பாக்கியலெட்சுமி மற்றும் உடுமலை கோட்டாட்சியர் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இணை இயக்குநர் பாக்கியலெட்சுமி உடுமலை அரசு மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி ஆய்வு செய்தார். அங்கு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பெண் மருத்துவர் ஜோதிமணி (45) தாராபுரத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம், தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளது.

இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திருப்பூர் இணை இயக்குநர் மருத்துவர் த.கி.பாக்கியலெட்சுமி கூறும்போது, ''மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மருத்துவர் ஜோதிமணியை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x