Published : 16 Oct 2021 04:56 PM
Last Updated : 16 Oct 2021 04:56 PM
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மேம்பாலங்கள் கட்டுமானப் பணியில் எதுவும் செய்யாமல் இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாகப் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''சென்னையில் தமிழக அரசால் பாலத்தின் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கோயம்பேட்டில் உயர்மட்ட சாலை மேம்பாலத்தைத் திறக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இந்தப் பணி ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் 29.09.2015 அன்று தொடங்கப்பட்டது. இப்பணி 28.06.2018க்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த உயர்மட்ட மேம்பாலப் பணியுடன், சேவை சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஆட்சியில் எதுவும் 2018 வரை நடைபெறவில்லை.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின், துறையின் அமைச்சர் என்ற முறையில் நேரடியாக இரு முறை 18.07.2021, 18.09.2021 ஆகிய தேதிகளில் பாலத்தைப் பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினேன். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு மனுவை (மனு எண். 123/2021) அரசின் சார்பாக முயற்சி செய்து சாதகமான தீர்ப்பினை 29.09.2021 அன்றுதான் திமுக அரசு பெற்றது. அதில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும், ஆக்கிரமிப்புகளையும் சில தினங்களுக்கு முன்தான் அகற்றினோம். இப்பணிகள் எதனையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காலத்தை வீணாகக் கடத்தியது உங்கள் அரசுதான். இறுதிக்கட்டப் பணிகளை திமுக அரசு 31.10.2021க்குள் முடிக்கும். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோயம்பேடு மேம்பாலம் கொண்டுவரப்படும்.
வேளச்சேரி புறவழிச் சாலையில் 29.06.2012 அன்று ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது. மூன்று ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் 23.12.2015-ல் ஒப்பந்ததாரர் பணியைத் தொடங்கினார். இந்தப் பணியை ஒப்பந்தப்படி 22.09.2018-ல் முடித்திருக்க வேண்டும்.
ஆனால், பணியை முடிக்க வேண்டிய காலம் முடிந்த பின்னர் 23 மாதங்கள் கும்பகர்ணனைப் போல உறக்க நிலையில் இருந்தது உங்களுடைய ஆட்சிதான். திமுக அரசு பொறுப்பேற்றபின் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் அப்பணிகளை 18.07.2021ல் நானே நேரடியாகக் களத்தில் ஆய்வு செய்தேன். வேளச்சேரி மேம்பாலப் பணியின் இரண்டாம் அடுக்கை 31.10.2021க்குள்ளும் முதல் அடுக்கை 31.12.2021க்குள்ளும் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் அறிவுரை வழங்கினேன். இரண்டாம் அடுக்கு இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
மேடவாக்கம் மேம்பாலப் பணி மதிப்பீடு ரூ.133.10 கோடியில் 14.08.2015-ல் வழங்கப்பட்டது. இப்பணிக்கான உத்தரவு 08.01.2016-ல் சன்ஷைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் பணியைச் செயல்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததால் ஒப்பந்தம் 14.08.2018-ல் ரத்து செய்யப்பட்டது. மறுபடியும் ஒப்பந்தம் கோரிய ரெனாட்டஸ் நிறுவனத்திற்கு 12.12.2018-ல் பணி உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் 12.09.2020க்குள் பணியை முடித்திருக்க வேண்டும். ஆனால், இப்பணி முடிக்கப்படவில்லை. இதற்குப் பின்னர் 8 மாத காலம் ஆட்சியில் இருந்தது நீங்கள்தானே?
மேற்கண்ட மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணிகளை 18.07.2021 அன்று நானே நேரடியாகப் பார்வையிட்டேன். மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணியை 31.12.2021க்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளேன். ஒப்பந்தக் காலத்திற்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி அரசுதான். இன்று போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலை மேம்பாலப் பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?''
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT