Published : 16 Oct 2021 03:28 PM
Last Updated : 16 Oct 2021 03:28 PM

கொளத்தூரில் 'வருமுன் காப்போம்' சிறப்பு மருத்துவ முகாம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை

கொளத்தூர், சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.10.2021) கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம், கொளத்தூர் பள்ளிச் சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களின் உயிர் காக்கும் திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.

ஏழை எளியோருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்திடும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 385 வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம் வீதம் மொத்தம் ஒரு வருடத்திற்கு 1,155 முகாம்களும், நகர்ப்புறங்களில் ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம் வீதம் ஒரு வருடத்திற்கு 80 முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும் நடத்த திட்டமிட்டு முதல்வரால் 29.9.2021 அன்று சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தொடங்கி வைக்கப்பட்டது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்களின் மூலம் பொது மக்களுக்குப் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு மருத்துவர்களால் நோயைக் கண்டறிந்து அதற்கான முதல் சிகிச்சைகளும் அளிக்கப்படும். இம்முகாம்கள் மூலம், மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே நோய்க்கான ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கான ஆலோசனைகளைப் பெற இயலும்.

முதல்வரால் இன்று கொளத்தூர், சென்னை மாநகராட்சிப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்ட வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில், பில்ராத் மருத்துவமனையின் சார்பில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை முறைகள், ஆர்பிஎஸ் மருத்துவமனையின் சார்பில் குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைகள், முருகன் மருத்துவமனையின் சார்பில் நரம்பு மற்றும் எலும்பு சார்ந்த சிகிச்சைகள், போர்டிஸ் மலர் மருத்துவமனையின் சார்பில் இதய சிகிச்சைகள், வாசன் கண் மருத்துவமனையின் சார்பில் கண் பரிசோதனைகள் மற்றும் இலவசக் கண் கண்ணாடி வழங்குதல், சென்னை பல் மருத்துவமனையின் சார்பில் பல் தொடர்பான சிகிச்சைகள், MERF மருத்துவமனையின் மூலம் காது- மூக்கு- தொண்டை குறித்த சிகிச்சைகள், HYCARE மருத்துவமனையின் மூலம் சர்க்கரை மற்றும் சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைகள், சீடிஎச் மருத்துவமனையின் சார்பில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள், காசநோய் தொடர்பான சிகிச்சைகள், ஆயுஷ் மருத்துவர்கள் மூலம் சித்த மருத்துவ சிகிச்சைகள் ஆகிய சிகிச்சை முறைகள் குறித்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இம்முகாமில் 35 மருத்துவர்கள், 60 செவிலியர்கள், 3 மருந்தாளுநர்கள், 20 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இம்முகாம் மூலம் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்பட்டுப் பொதுமக்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x