Published : 18 Mar 2016 02:09 PM
Last Updated : 18 Mar 2016 02:09 PM
முல்லை பெரியாறு அணையின் தலைமை மதகை கடந்த 2011-ம் ஆண்டு கேரள அரசியல் கட்சியினர் சிலர் சேதப்படுத்த முயன்றபோது அதனைத் தடுக்க தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குமுளியை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். இதில் கலவரம் வெடித்தது.
இது தொடர்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர் மீது கூடலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்றுமுன்தினம் 24 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பெரியாறு, வைகை 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ், 18-ம் கால்வாய் திட்ட விவசாய சங்கச் செயலர் ஏ.திருப்பதிவாசகன், கூடலூர் அனைத்து விவசாயிகள் நல சங்க துணைச் செயலர் வீர்பாபு ஆகியோர் கூறியது:
பெரியாறு அணையைக் காப்பதற்காகவே போராட்டம் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 24 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது. போராட்டத்தின்போது கேரளத்தைச் சேர்ந்தோர் அங்கு தங்கியிருந்த தமிழர்களைத் தாக்கினர். அத்துமீறி நுழைந்து தலைமை மதகை சேதப்படுத்த முயன்றனர். இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது அம்மாநில அரசு வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவ்வழக்கு கிடப்பில் போட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 பேர் மீது தொடர்ப்பட்டுள்ள இந்த வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். பொது நல பிரச்சினைக்காக போராட யாரும் முன்வராவிட்டால் பெரியாறு அணை உரிமை கொஞ்சம், கொஞ்சமாக கேரள வசம் சென்றுவிடும். தென் மாவட்ட மக்கள் பாசனத்துக்கும், குடிநீருக்கும் கேரளத்திடம் கையேந்தும் நிலை உருவாகிவிடும். மேலும் தேர்தல் காலங்களில் ரவுடிகள், கொலை, கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது காவல்துறையினரின் கைது நடவடிக்கை தொடரும், ஆனால் விவசாயிகள், தொழி லாளர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது புதிராக உள்ளது என்றனர்.
வழக்கை ரத்து செய்ய தீர்மானம்
24 பேர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி இன்று (மார்ச் 18) தேனியில் நடைபெற உள்ள மாவட்ட வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT