Published : 16 Oct 2021 12:37 PM
Last Updated : 16 Oct 2021 12:37 PM
என் மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதாவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன் என, சசிகலா தெரிவித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (அக்.16) எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த தன் இல்லத்திலிருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்டு சசிகலா மெரினா சென்றார். வழிநெடுக அவருடைய ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மெரினாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் சூழ்ந்தனர்.
சிறை செல்லும் முன்பு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா சபதம் செய்தார். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று முதல் முறையாகச் சென்றார். அங்கு கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர், சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் ஏன் தாமதமாக இங்கு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஜெயலலிதாவுடன் நான் இருந்த காலங்கள் என் வயதின் முக்கால் பகுதியாகும். நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதாவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன்.
அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டு வந்தேன். ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் தமிழக மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். நிச்சயம் தொண்டர்களையும் கழகத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT