Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

நீதிமன்றங்களில் இனி பச்சை நிற லீகல் சைஸ் பேப்பருக்கு வேலையில்லை; வெள்ளை நிற ஏ4 பேப்பரில் மனுக்களை தாக்கல் செய்தால் போதும்: உயர் நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவு

சென்னை

நீதிமன்றங்களில் இனி மனுக்களை தாக்கல் செய்ய பச்சை நிற லீகல் சைஸ் பேப்பரை தேடி அலைய வேண்டியதில்லை. வெள்ளை நிறஏ4 பேப்பரில் மனுக்களை தாக்கல்செய்தால் போதும் என உயர் நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பிரமாண பத்திரங்கள், பிராதுகள், ஆவணங்கள், உத்தரவுநகல்கள், வக்காலத்து நாமா மற்றும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய 100 ஜிஎஸ்எம் தரம் கொண்ட பச்சை நிற ஃபுல்-ஸ்கேப் லீகல் சைஸ் பேப்பர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

பொதுவாக நீதிபதிகள் படிப்பதற்காக தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரங்கள், மனுக்கள்மற்றும் ஆவணங்கள் அனைத்தும்பச்சை நிற லீகல் சைஸ் பேப்பர்களிலும், பிரதிவாதிகளுக்கான மனுக்கள் வெள்ளை நிற பேப்பர்களிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி உரிமையியல் நடைமுறை சட்டம் - 1908, பிரிவு 122-ன்கீழ் உரிமையியல் விதிகளுக்கான தொழில் நெறி பயிற்சி மற்றும் சுற்றறிக்கைக்கான உத்தரவுகள் - விதி 6-ல் சில திருத்தங்களை தமிழக அரசின் அனுமதியுடன் சென்னை உயர் நீதிமன்றம் கொண்டுவந்துள்ளது. இந்த திருத்தங்கள் குறித்த அறிவிப்பாணை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் பிறப்பித்த உத்தரவில், ‘நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் அனைத்து பிராதுகள், எழுத்துப்பூர்வமான வாதங்கள், மனுக்கள், பிரமாணப் பத்திரங்கள், மேல்முறையீட்டு மனுக்கள் இனி 75 ஜிஎஸ்எம் கொண்ட வெள்ளை நிற ஏ4 பேப்பரில் தாக்கல் செய்தால் போதும். முன்பக்கம் மற்றும் பின்புற பக்கங்களில் மனுக்களை தாக்கல் செய்யும்போது அதற்கான பக்கங்களை நம்பர்களில் குறிப்பிட வேண்டும். மேல்முறையீட்டு மற்றும் அசல் வழக்குகளுக்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்போது ஏ4 சைஸ் பேப்பரில் மேல்புறம் மற்றும் அடிப்பக்கத்தில் இருந்து 2.5 செமீ அளவுக்கும், இடது புறத்தில் 3 செமீ அளவுக்கும், வலது புறத்தில் 2.5 செமீ அளவுக்கும் மார்ஜின் விட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் கூறியதாவது:

வழக்கமாக நீதிபதிகளின் கவனத்துக்காக அல்லது படிப்பதற்காக தாக்கல் செய்யப்படும் எல்லாமனுக்களும் பச்சை நிற லீகல்சைஸ் பேப்பர்களில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போதுஅனைத்து ஆவணங்களையும்ஏ4 சைஸ் வெள்ளை பேப்பரில்தாக்கல் செய்தால் போதும் எனஉயர்நீதிமன்ற பதிவுத் துறைஅறிவுறுத்தியுள்ளது. முன்பு வழக்கின் பிரதான கோரிக்கை தொடர்பான பிரமாணப் பத்திர மனுவை,ஒவ்வொரு இடையீட்டு கோரிக்கைமனுக்களுக்கும் சேர்த்து, சேர்த்துவைத்து தாக்கல் செய்ய வேண்டும். இதனால் பக்க எண்ணிக்கைஅதிகரிப்பதுடன், பேப்பர், டைப்பிங் என செலவும் அதிகம். தற்போது ஒரே பிரதான மனுவில் அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரே பிரமாண பத்திரமாக ஏ4 சைஸ் பேப்பரில் தாக்கல் செய்தால் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ஜின் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் எழுத்து அளவு (Font) குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

அதேபோல, இந்த புதிய நடைமுறை இன்னும் முழுமையாக உயர் நீதிமன்றத்தில் வரவில்லை. பழைய நடைமுறைப்படி பச்சை நிற லீகல் சைஸ் பேப்பர்களிலும், புதிய நடைமுறைப்படி வெள்ளை நிற ஏ4 சைஸ் பேப்பர்களிலும் வழக்கறிஞர்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இரண்டையும் பதிவுத் துறை ஏற்று வருகிறது. அதேநேரம், மனுதாரர்களின் அனுமதி தொடர்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வக்காலத்து நாமா அனைத்தும் ஏற்கெனவே பச்சை நிற லீகல் சைஸ் பேப்பர்களில், வழக்கறிஞர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் அச்சடித்துவைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் வெள்ளை நிற ஏ4 சைஸ் பேப்பர்களில் தாக்கல் செய்ய வேண்டுமா என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது கரோனா காலகட்டம் என்பதால் வழக்கறிஞர்கள் மனுக்களை தாக்கல் செய்வதும், வாதிடுவதும் ஆன்லைன் மூலமாகவே நடந்துவருகிறது. பெரும்பாலான ஸ்கேனர் மிஷின்கள் யுனிவர்ஸல் சைஸ் எனப்படும் ஏ4 சைஸ்அளவு கொண்ட பேப்பர்களைஸ்கேன் செய்யும் அளவுக்கேவடிவமைக்கப்பட்டுள்ளது. பச்சைநிறம் கொண்ட லீகல் பேப்பர்களை தேடி அலைந்து வாங்கி,அதை ஸ்கேன் செய்வதற்கும் உரியமிஷின்கள் உள்ள இடங்களை வழக்கறிஞர்கள் தேடிச்செல்லும் நிலை இருந்தது. தற்போது ஏ4 பேப்பர்களில் மனு தாக்கல் செய்யலாம் என்பதால் அந்த கஷ்டம் வழக்கறிஞர்களுக்கு இனி இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x