Published : 12 Mar 2016 03:07 PM
Last Updated : 12 Mar 2016 03:07 PM
மதுரை மாவட்டத்தில் இரண்டாம்போக நெற்பயிர்கள், புகையான் நோயால் புகைந்துவிட்டதால், காவலுக்கு இருந்த மூன்று மாதச் சம்பளம்கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், 65 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. கால்வாய் பாசனம், கண்மாய் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம் முறையில் விவசாயிகள் இரண்டு போக நெல் சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் அதிகம் உள்ள சில இடங்களில் மட்டும் மூன்றுபோக சாகுபடி நடைபெறுகிறது. தற்போது இரண்டாம் போக சாகுபடி முடிந்து விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் புகையான் நோயால் புகைந்துபோய் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை அருகே வரிச்சியூர் விவசாயி பெரியமுத்தழகு (65) கூறியதாவது:
நகைகளை வங்கியில் அடகு வைத்து அரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்தேன். நிலத்தில் டிராக்டரை வைத்து உழ ரூ. 1700 செலவாகும். அதனால், நானே மண்வெட்டியால் மண்ணை வெட்டி மரக்கட்டையை வைத்து உழுதேன். உரத்துக்கு மட்டும் ரூ. 10 ஆயிரம் செலவு செய்தேன். தற்போது புகையான் நோயால் 15 மூட்டை மகசூல் கிடைத்தாலே அதிகம். ஒரு மூட்டை நெல் ரூ.800-க்கு விற்கும். இந்தப் பணத்தை வைத்து அடகு வைத்த நகையைக் கூட திருப்ப முடியாது. அதனால்தான், அந்த காலத்திலேயே ‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ எனச் சொல்லி இருக்கின்றனர்.
இதுதவிர வயல்களில் எலி, மயில், கோயில் மாடுகள் தொல்லையும் இருக்கிறது. இவற்றை விரட்ட காவலுக்கு இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு நாளைக்கு வெளியே வேலைக்குச் சென்றால் ரூ.500 கிடைத்திருக்கும். தற்போது 3 மாதம் நெற் பயிர்களுக்கு காவல் காத்த சம்பளம் கூட கிடைக்காது. கவுரவத்துக்காக நெல் சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புகையான் நோய்க்கு காரணம்?
மதுரை விவசாய பல்கலைக்கழகக் கல்லூரி பூச்சியியல் துறை தலைவர் மா. கல்யாணசுந்தரம் கூறியதாவது: சாம்பல் நிற தத்துப் பூச்சிகள்தான் புகையான் நோய் பரவலுக்கு காரணம். இவை வெட்டுக்கிளி மாதிரி குதித்து தாவும். தூரில் சாறை உறிஞ்சும்போது, வேதியியல் பொருட்களை நெல்கதிர் இலையில் உட் செலுத்தி விடும். இதனால், நெற்பயிர்கள் தீ வைத்தது போல புகைந்துவிடும். வயல்களில் கூடுதல் தழைச் சத்து இடுவதால், செடிகள் வேகமாக வளரும்போது இந்த பூச்சிகள் வருகின்றன. இடைவெளியில்லாமல் பயிரிடுவதாலும், தண்ணீர் அதிகளவு தேக்கி வைத்தாலும் இந்த பூச்சிகள் வரும். அதனால் நெல் சாகுபடியில் இடைவெளி, உரம், தண்ணீர் நிர்வாகம் முக்கியம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT