Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM
பாலாற்றில் சுமார் 10 ஆயிரம் கன அடிக்கு வெள்ளநீர் செல்வதால் பொதுப்பணித்துறை ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பி நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. கவுன்டன்யா வனப்பகுதியில் இருந்து வரும் மலட்டாறு மற்றும் கவுன்டன்யா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் கலந்து வருகிறது. ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் இருந்து புல்லூர் தடுப்பணையை கடந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் வெள்ள நீர் வந்துகொண்டிருக்கிறது.
அதேபோல், அகரம் ஆறு, பாலாற்றின் துணை ஆறுகளில் இருந்தும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் வேலூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 10 ஆயிரம் கன அடிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலாற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளநீர் செல்கிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட 2 கன அடி தண்ணீர் பொன்னையாற்றின் வழியாக பாலாற்றில் கலந்து வருகிறது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக் கவோ, நீச்சலடிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியை அதிகரித் துள்ளனர். வேலூர் பாலாற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் அளவு குறித்து ட்ரோன் கேமராக்கள் மூலம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் கண்காணித்து வருகிறார்.
பாலாற்றில் அதிக நீர்வரத்து காரணமாக ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் செதுவாலை, விரிஞ்சிபுரம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் வேலூர் சதுப்பேரி ஏரி 70 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளது. சதுப்பேரி ஏரி நிரம்பினால் உபரி நீர் தொரப்பாடி ஏரிக்கு திருப்பப்படும் என கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஏரிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீரை காவேரிப்பாக்கம் ஏரிக்கு திருப்பி விட்டுள்ளனர்.
ஏற்கெனவே காவேரிப்பாக்கம் ஏரி 80 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளதால் அங்கிருந்து மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment