Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM
ஆம்பூரில் சேறும், சகதியுமான சாலைகளை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. கடந்த 2019-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆம்பூர் நகராட்சியில் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.165.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. பாதாள சாக்கடை திட்டத்துக்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு அங்கு குழாய் புதைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பணிகள் முடிந்த இடங்களில் சாலைகளை முறையாக மூடாததால் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குண்டும், குழியுமான சாலைகள் தற்போது சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
இதனால், அந்த சாலைகளை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தி நகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிவுற்றதாக நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால், 50 சதவீதப்பணிகள் கூட முடிக்கப்படவில்லை. ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சோமலாபுரம், ரெட்டிதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பாதியில் நிற்கிறது. தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படவில்லை. சாலை முழுவதும் கழிவுநீர் கலந்து ஓடுகிறது.
ஏ-கஸ்பா பகுதியில் இருந்து சோமலாபுரம் செல்லும் பிரதான சாலை கடந்த ஒன்றரை மாதங்களாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இச்சாலை வழியாக தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இச்சாலை வழியாக வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கின்றன. சில நேரங்களில் பொதுமக்கள் வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.
சோமலாபுரம் பகுதியில் இருந்து ஆம்பூர் பேருந்து நிலையமோ அல்லது பஜார் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் பி-கஸ்பா வழியாக காதுகேளாதோர் பள்ளியை அடைந்து அங்கிருந்து தேசிய நெடுஞ்சலையை அடைந்து, பின்னர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி செல்ல வேண்டும். இதனால், எரிபொருள் வீணாகிறது. நேர விரயமும் ஏற்படுகிறது. குண்டும், குழியுமான சாலைகளில் பயணிப்பதால் வாகனங்கள் சேதமாகின்றன.
சிறுவர்களும், வயதானவர் களும் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் அனைத்துச்சாலைகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. ஏ-கஸ்பா, பி-கஸ்பா பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்ட தீவுப்போல உள்ளது. இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து விரைவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதற்கான தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம்’’ என்றனர்.
இது குறித்து ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ராஜேந்திரன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைகிறது. எனவே, பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தொடர் மழை காரணமாகஅப்பணிகளை மேற்கொள்ளமுடியவில்லை. மண் ஈரப்பதமாக உள்ள சாலைகளை சீரமைப்பது கடினமாக உள்ளது. எனவே, அதற்கான நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
ஏ-கஸ்பா பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அப்பகுதியில் சேதமான சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பபணிகள் முடிவுற்று, அங்கு வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளோம்.
ஆம்பூர் ஏ-கஸ்பா மயானப்பகுதி அருகாமையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளும் தொடங்கப்ப பட்டுள்ளன. எனவே, திட்டமிட்ட காலநேரத்துக்குள் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும். பாதாள சாக்கடைப்பணிகள் முடிந்த பகுதியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருறோம். அதற்கான பணிகள் ஓரிரு நாளில் தொடங்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT