Published : 15 Oct 2021 09:16 PM
Last Updated : 15 Oct 2021 09:16 PM

திமுக வளர்ந்ததே கல்லூரிகளில்தான்: தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்ததே கல்லூரிகளில்தான். அதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகமான கல்லூரிகளை உருவாக்கியிருக்கிறோம், இப்போதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் ஆகிய இவையுண்டு தானுண்டு என்று வாழக்கூடாது என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். ஒருவரது கல்வி, அவருக்கு மட்டுமல்லாமல், அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நாட்டுக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்.

அதுதான் உண்மையான கல்வியாக இருந்திட முடியும்.

கல்வியுடன் சேர்ந்து சமூக அக்கறையையும் ஊட்டும் கல்வியாக அதனைப் புகட்ட வேண்டும். அப்படி புகட்டும் நிறுவனமாக லயோலா போன்ற நிறுவனங்கள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தான் வளர்கின்றபோது சமூகம் வளர வேண்டும். சமூகத்தை உயர்த்துவதே தான் உயர்வதற்கு வழிவகுக்கும் என்று உணர வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய, சிறுபான்மையின மக்களுக்கும், பட்டியலினக் குடும்பங்களில் இருந்து வரக்கூடிய பயில்கிற மாணவர்களுக்கும் நிதியுதவி அளித்து, அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி இந்த லிபா நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி 2010-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த நேரத்தில், இந்தக் கட்டடத்திற்கு முன்பு அமைந்திருக்கக்கூடிய தொழில்நுட்பக் கல்லூரியை அவர் திறந்து வைத்தார். சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வளாகத்திற்கு நான் வந்து, இந்தக் கட்டடத்தை திறந்து வைத்திருக்கிறேன்.

அதற்காக அத்தனை பேருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கருணாநிதி திறந்து வைத்தது ஒரு தொழில்நுட்பக் கல்லூரி. இன்று நான் உங்கள் மத்தியில் திறந்து வைத்திருப்பது ஒரு மேலாண்மைக் கல்லூரி.

திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்ததே கல்லூரிகளில்தான். அதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகமான கல்லூரிகளை உருவாக்கியிருக்கிறோம், இப்போதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். காமராஜர் காலத்தில் பள்ளிகள் அதிகம் உருவாக்கப்பட்டது. கருணாநிதி காலத்தில் கல்லூரிகள் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைய ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி அதிகமாக பல்கிப் பெருக வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு இந்த இலக்கை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட்டோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு பட்டம் என்ற இலக்கையும் விரைவில் அடைந்துவிடுவோம். அனைவரும் உயர்கல்வி கற்றவர்களாக வளர வேண்டும்; வாழவேண்டும். அந்த இலக்கை எட்டிய முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர வேண்டும்.

அதற்கு லயோலா போன்ற நிறுவனங்களும் தங்களது அறிவுப் பணியைத் தொடர வேண்டும். புதிய புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். அதனை நோக்கி மாணவர்களை ஈர்க்க வேண்டும்.

அத்தகைய பட்டம் பெற்றவர்கள், உலகம் முழுவதும் உள்ள தொழில்களை, வேலைவாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும். தமிழர்கள் தங்களது அறிவால் - திறமையால் - கல்வியால் - வேலைவாய்ப்பால் உலகளாவிய பெருமையை அடைய வேண்டும். அதற்கு லயோலா போன்ற கல்வி நிறுவனங்கள் உறுதுணையாக நிற்க வேண்டும்.

தொழில்முனைவோர்களை உருவாக்குகிற இதுபோன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்கள் நமது நாட்டில் பெருகிட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில், ஒரு கல்வி நிறுவனம், வெறுமனே வேலையாட்களை உருவாக்குவதைவிட; சமூகத்தையும், தொழில்சார்ந்த நிறுவனங்களையும் முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்துகிற தலைவர்களையும் உருவாக்கிட நீங்கள் உதவிடவேண்டும்.

இங்கு உங்கள் ஆட்சி, எங்கள் ஆட்சி என்று ஒரு பட்டிமன்றமே நடந்திருக்கிறது. அதனால்தான் நான் தொடக்கத்திலேயே சொன்னேன், இது நமது ஆட்சி. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுற்று வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது இந்த கல்லூரிக்கு நான் வந்து, அதற்கான சான்றிதழ் வாங்கிக்கொண்டு, கருணாநிதியிய்ன் நினைவிடத்திற்குத்தான் சென்றேன்.

அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தருகின்றபோது “வெற்றியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று நிருபர்கள் கேட்டார்கள். மகிழ்ச்சி அடைகிறேன், வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும், வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு ஒட்டு போடாமல் நாம் தவறிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அந்த அளவிற்கு நம்முடைய பணி இருக்கும் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

திமுக ஆட்சி அமைந்து, நூறு நாட்களில் பலநூறு திட்டங்களை அறிவித்து, அவற்றைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இருண்ட நிலையில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் ஒரு ஒளிமயமான பாதையில் வீறுநடை போட வைத்திருக்கிறோம்.

சமூகநீதி கொண்ட பொருளாதார வளர்ச்சியை உருவாக்க நினைக்கிறோம். அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்கிற அரசாக நம்முடைய அரசு நிச்சயம் அமையும்.

இதன் காரணமாக தமிழ்நாட்டை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றறிக் காட்டுவோம். அந்த மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவிடவேண்டும்.

பத்து மாநிலங்களைக் குறிப்பிட்டு, அதில் முதலிடத்தில் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்று பெருமையாகச் சொன்னார்கள், இது எனக்கு பெருமை இல்லை. நம்முடைய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்ற பெருமைதான் எனக்கு பெருமிதம் தரும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x