Published : 15 Oct 2021 06:55 PM
Last Updated : 15 Oct 2021 06:55 PM
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தோனியின் உருவத்தை 12 அடியில் ரங்கோலியாக வரைந்து அசத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் புதுச்சேரி ஓவியப் பட்டதாரிப் பெண்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம், அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகி. ஓவியப் பட்டதாரிப் பெண்ணான இவர் தேசத் தலைவர்கள் ஒவ்வொருவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போதும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் உருவங்களை தனது வீட்டில் உள்ள அறைகள் முழுவதும் பிரம்மாண்டமான முறையில் ரங்கோலியால் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மேலும் விளையாட்டு வீரர்களின் சாதனைகளையும் அவர் ரங்கோலியால் ஓவியம் வரைந்து, பாராட்டு தெரிவித்து வருகிறார். காந்தி, அப்துல் கலாம், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்களையும் பிரம்மாண்டமாக ரங்கோலியால் வரைந்து அசத்தியுள்ளார். மேலும் அன்னை தெரசா, டாக்டர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் சிற்ப ஓவியங்களையும் வடித்து அசத்தியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த நீரஜ் சோப்ராவின் உருவத்தை ரங்கோலியில் வரைந்து, வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஐபிஎல் டி20 தொடரின் போது கிரிக்கெட் வீரர் தோனியின் சிற்ப ஓவியத்தை வடித்திருந்தார்.
இந்நிலையில் துபாயில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் சாம்பியன் பட்டத்துக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களம் காண்கின்றன. இப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தோனியின் உருவத்தை ரங்கோலியால் வரைந்து அறிவழகி அசத்தியுள்ளார்.
12 அடி உயரம், 12 அடி அகலத்தில் 7 கிலோ கோலமாவு, பல வண்ணங்களைக் கொண்டு 2 நாட்களில் தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்து அவருக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓவியப் பட்டதாரிப் பெண் அறிவழகியின் இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அறிவழகி கூறும்போது, ‘‘ஐபிஎல் ஃபைனலில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்திலும், நான் தோனியின் தீவிர ரசிகை என்பதாலும், தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்து, வாழ்த்து தெரிவித்துள்ளேன்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது தோனியின் சிறிய சிலையைச் செய்தேன். இந்த ஐபிஎல் போட்டியில் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த ஓவியத்தை வரைந்தேன்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT