Last Updated : 15 Oct, 2021 06:46 PM

1  

Published : 15 Oct 2021 06:46 PM
Last Updated : 15 Oct 2021 06:46 PM

தேர்தல் வியூகம் வகுப்பதில் தேமுதிக தொடர்ச்சியாக சறுக்கல்: திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்டச் செயலாளர் பேட்டி

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த கிருஷ்ணகோபால்.

திருச்சி

தாய்க் கட்சியான திமுகவுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி எனவும், தேர்தல் வியூகம் வகுப்பதில் தேமுதிக தொடர்ச்சியாக சறுக்கலைச் சந்தித்து வருவதாகவும், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகோபால் தெரிவித்தார்

தேமுதிகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகோபால். மணப்பாறை நகரப் பொருளாளர், நகரப் பொறுப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாவட்டப் பொருளாளர் என, அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 2 முறை அக்கட்சியின் சார்பில் மணப்பாறை தொகுதியிலும் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

கிருஷ்ணகோபால்: கோப்புப்படம்

இந்நிலையில், இன்று (அக். 15) அவர் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதுகுறித்து கிருஷ்ணகோபால் கூறியதாவது:

"தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான ஈர்ப்பால், அவர் கட்சி தொடங்கியதிலிருந்து தீவிரமாகப் பணியாற்றி வந்தேன். மணப்பாறை தொகுதியில் தேமுதிகவை வளர்த்ததில் எனக்குப் பெரும் பங்குண்டு. கடந்த சில காலமாக அக்கட்சியின் போக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

சொந்தப் பணத்தை லட்சம், லட்சமாக செலவு செய்து கட்சியை வளர்த்தாலும்கூட, கட்சிக்குள் சிலர் நம்மைத் தேவையின்றி விமர்சிக்கின்றனர். இக்கட்சியில் என்னை நம்பியிருக்கும் யாருக்கும், எதுவும் செய்ய முடியாத நிலையில் தவித்து வந்தேன்.

இதற்கிடையே, தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், கட்சியை நிர்வகிக்கக்கூடியவர்கள் அண்மையில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களைக் கூட அழைத்து ஆலோசனை நடத்தவில்லை.

தேர்தல் வியூகம் வகுப்பதிலும் தொடர்ச்சியாக சறுக்கலைச் சந்தித்து வருகின்றனர். எனவே, எனது ஆதரவாளர்களின் எதிர்காலம் கருதி இக்கட்சியிலிருந்து வெளியேறுவதென முடிவு செய்தேன். பாஜக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து மாநில அளவில் பொறுப்புகள் வழங்குவதாக அழைப்புகள் வந்தன.

ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதால், அவரது தலைமையை ஏற்றுச் செயல்படுவதென முடிவு செய்தேன். 12 வயதிலேயே திமுக கொடி பிடித்து வளர்ந்த நான், திருச்சி சட்டக் கல்லூரியில் படித்தபோது, திமுக மாணவர் அமைப்பு தலைவராகவும் இருந்தேன். எனவே, தாய்க் கட்சிக்குத் திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி".

இவ்வாறு கிருஷ்ணகோபால் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த கிருஷ்ணகோபால், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x