Published : 15 Oct 2021 06:25 PM
Last Updated : 15 Oct 2021 06:25 PM
கன்னியாகுமரியில் இருந்து குஜராத்திற்கு 2085 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போலீஸாரின் இருசக்கர வாகன தேசிய ஒற்றுமைப் பயணம் தொடங்கியது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை வரை செல்லும் 2085 கிலோ மீட்டர் தூரத்திலான போலீஸாரின் தேசிய ஒன்றுமை தின மோட்டார் சைக்கிள் பேரணி இன்று தொடங்கியது.
பேரணியைத் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கூடுதல் காவல்துறை இயக்குந அபய்குமார்சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியைத் தொடங்கி வைத்த அபய்குமார் சிங் பேசுகையில், ’’சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒன்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இத்தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியாவின் வடக்கே ஜம்மு காஷ்மீர், தெற்கே தமிழகத்தில் கன்னியாகுமரி, மேற்கே குஜராத், கிழக்கில் திரிபுரா ஆகிய இடங்களில் இருந்து காவல்துறை சார்பில் இருசக்கரப் பேரணி துவங்கப்பட்டு குஜராத்தின் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையினை அடைகின்றது.
தமிழ்நாடு காவல்துறை சார்பில் கன்னியாகுமரியில் இருந்து 25 தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள், 16 உதவியாளர்கள் அடங்கிய குழு 25 மோட்டார் சைக்கிள்களில் பேரணியாகப் புறப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஹூப்ளி, கொல்ஹாபூர், பூனே, தானே, சூரத், நர்மதா ஆகிய மாவட்டங்கள் வழியாக 2085 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு வருகிற 24-ம் தேதி குஜராத்தை அடைகின்றனர்.
அங்கு வருகிற 31-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் தேசிய ஒன்றுமை தினக் கொண்டாட்டத்தில் காவல்துறைக் குழுவினர் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) மகேஸ்வரன், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் ஜெயபால், மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT