Published : 15 Oct 2021 02:50 PM
Last Updated : 15 Oct 2021 02:50 PM
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 15) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா தொற்று காரணமாகவும், பொருளாதாரத் தேக்க நிலையினாலும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது.
இத்தகைய விலை உயர்வை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்த எதிர்ப்பைக் கடுகளவு கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வினால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.50 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.26 ஆகவும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 14 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
2014-15இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.48 ஆக இருந்தது. தற்போது ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூ.3.56இல் இருந்து ரூ.31.80 எனக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி 459 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014இல் ரூ.410 ஆக இருந்தது. ஆனால், தற்போது 2021இல் ரூ.810 ஆக இருமடங்கு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இத்தகைய விலை உயர்வினால் போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயருகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான பணவீக்கத்தை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று ஒருபக்கம், பொருளாதாரப் பேரழவினால் ஏற்பட்ட பாதிப்பு ஒருபக்கம் என, அனைத்து நிலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாங்கும் சக்தி குறைந்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அலட்சியப் போக்குடன் மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலமே மக்களின் பாதிப்புகளுக்குத் தீர்வு கிடைக்கும்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT