Published : 15 Oct 2021 08:37 AM
Last Updated : 15 Oct 2021 08:37 AM
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் 10-வது நாளான இன்று (ஆக்.15) இரவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவின் சிறப்பு மிக்க திருவிழாக்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்வேறு வேடங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி உள்பிரகார பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் தோறும் அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கலைநிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை வசூலித்தனர்.
கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் விழாவில் பக்தர்கள், தசரா குழுவினர் பங்கேற்க மாவட்ட, கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி கொடியேற்றம்,சூரசம்ஹாரம் மற்றும் விழாவின் 8,9,10,15,16,17 ஆகிய தேதிகளில் பக்தர்கள் முழுமையாக அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், மற்ற விழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனால் கோயிலைச் சுற்றி முழுமையாக தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது.பக்தர்கள் வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று அக்.15-ம் தேதி இரவு நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 12 மணிக்கு மேல் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன் மகிசாசூரனை சம்ஹாரம் செய்கிறார். அக்.16ம் தேதி நாளை காலை 3 மணிக்கு மேல் உற்சவமூர்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், அபிஷேக ஆராதனைகள், மாலை 5 மணிக்கு மண்டபத்தில் இருந்து அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடைபெறும்.
வேடமணிந்த தசரா பக்தர்கள்,தசரா குழுவினர் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17-ம் தேதி பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT