Published : 15 Oct 2021 08:29 AM
Last Updated : 15 Oct 2021 08:29 AM

அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நவராத்திரி திருநாளில் பாஜகவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கும் அறநிலை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

— K.Annamalai (@annamalai_k) October 14, 2021

முன்னதாக, வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று சராசரியாக 1,300-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கரோனா பரவல் குறைந்திருந்தாலும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அத்தியாவசியத் தொழில்கள், பொழுதுபோக்கு சார்ந்த பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இத்தடையைத் தளர்த்தக் கோரி அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. வார இறுதி நாட்களில் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என, உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று (அக். 14) வெளியிட்ட உத்தரவில், "அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றியும் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.

’இது தனிப்பட்ட கட்சியின் வெற்றி கிடையாது’

இதற்கிடையில், அனைத்து நாட்களிலும் கோயில்களை வழிபாட்டிற்கு திறப்பதாக வெளியிடப்பட்ட முடிவை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதல்வரின் வழிகாட்டுதல்படி அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி வழிபாடு அனுமதிக்கப்படும். அனைத்து நாட்களிலும் கோயில்களை வழிபாட்டிற்கு திறப்பதாக வெளியிடப்பட்ட முடிவை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது. மக்களின், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x