Published : 14 Oct 2021 05:53 PM
Last Updated : 14 Oct 2021 05:53 PM

உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி; ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸுக்கு எரிச்சல்: அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம்

அமைச்சர் பெரியகருப்பன்: கோப்புப்படம்

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை மக்கள் அளித்து விட்டார்கள். இதனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்குமே எரிச்சல் ஏற்பட்டுள்ளது என, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (அக். 14) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் கடந்த 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான இடைத்தேர்தல்கள் தமிழக தேர்தல் ஆணையத்தால் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு, நடுநிலையோடு, தேவையான பாதுகாப்பு வசதிகளோடு எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவண்ணம் தேர்தல் நடத்தப்பட்டு, 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 5 மாத கால ஆட்சிக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் தந்து ஊக்குவிக்கின்ற வகையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தந்துள்ளார்கள்.

தமிழக மக்கள் தந்த அந்த மகத்தான வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து தந்த அறிக்கையில் தங்களது இயக்கம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட உண்மையை மறந்து தமிழக மக்கள் அவர்களுக்குத் தந்த படுதோல்வியை மறைத்து, முதல்வர் ஸ்டாலினுக்குத் தமிழக மக்கள் தந்த பேராதரவால் பெற்ற மகத்தான வெற்றியையும், மேற்படி தேர்தலை, ஜனநாயக முறையில் நேர்மையாக, நடுநிலையோடு, நடத்திய தமிழகத் தேர்தல் ஆணையத்தையும், கொச்சைப்படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள அவர்களின் கற்பனை அறிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்: கோப்புப்படம்

மேலும், கடந்த 2016-ல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை மூன்று வருடம் தள்ளிப் போட்டது அதிமுக அரசு. மாநிலத் தேர்தல் ஆணையம் 26.9.2016-ல் அறிவிப்பு வெளியிட்ட அன்றே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அந்த ஆணையத்தைத் தனது கைப்பாவையாக்கியது அதிமுக.

'தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது' என்று உயர் நீதிமன்றம் கண்டனம் செய்து தேர்தல் அறிவிப்பையே ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளியது அதிமுக அரசு. பிறகு உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல், மாநிலத் தேர்தல் ஆணையரையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைத்தது அதிமுக அரசு.

தேர்தல் நடத்துகிறோம் என, உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று 'வார்டு மறுவரையறை ஆணையத்தை' உருவாக்கி, அவசரச் சட்டம் பிறப்பித்து உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே தாமதம் செய்தது அதிமுக அரசு. பிறகு மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த விடாமல் செய்தது அதிமுக அரசு.

பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புறத் தேர்தல் எனப் பிரித்து, முதலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதுவும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்க அறிவித்தது அதிமுக அரசு. அதிமுக நடத்தத் தவறிய ஊரக உள்ளாட்சித் தேர்தலை இப்போது திமுக அரசு நடத்தியிருக்கிறது.

ஒருவர் இரு வேட்பாளருக்கு முன்மொழிந்த காரணத்தால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பு மனுவைத் தேர்தல் ஆணையம் விதிப்படி நிராகரித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான பாஸ்கரபாண்டியன் 'வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லக்கூடிய வேட்பாளர்களைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' எனக் கூறியதாக ஒரு கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஒரு காரணம் சொல்லியிருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கு அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. எத்தகைய அபாண்டப் பழியை, பொய்யை ஒரு மாவட்டத் தேர்தல் அதிகாரி மீது சுமத்துகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது அதிமுகவும் அங்கு வெற்றி பெற்றுள்ளதிலேயே தெரியவருகிறது.

திருப்பத்தூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அத்துமீறி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றதாகக் கூறியிருக்கிறார். அந்த புகாரைத் தொடர்ந்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரே அந்த வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்று, 'வாக்குப் பெட்டிகள் பத்திரமாக இருக்கின்றன, எதுவும் பிரிக்கப்படவில்லை' என்று கூறியிருக்கிறார். தன் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் சொன்னதைக் கூட ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிந்துகொள்ள முன்வரவில்லை.

இருவரும் கொடுத்துள்ள 5 பக்க அறிக்கையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக, ஒரு நிகழ்ச்சியைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. இதிலிருந்தே மாநிலத் தேர்தல் ஆணையம் அமைதியாகவும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்தியுள்ளது எனத் தெளிவாகிறது.

கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தைத் தங்களின் கைப்பாவையாக ஆட்டிப் படைத்த, பழைய ஞாபகத்தில் இந்தக் கற்பனைக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கிறது அவர்களது அறிக்கை.

தோல்வியை ஒப்புக் கொள்ளவும், மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் இருவருக்கும் மனமில்லை. திமுக ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை மக்கள் அளித்து விட்டார்கள் என இருவருக்குமே எரிச்சல்.

ஆனால், அந்த வெற்றி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரவு பகலாக கடந்த 5 மாதங்களாக மக்களுக்கு ஆற்றி வரும் பணிக்குக் கிடைத்த நற்சான்றிதழ் என்பதை இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். பத்தாண்டு காலத்தில் இப்போதுதான் மாநிலத் தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டுள்ளது. காவல்துறையும் நடுநிலையோடு நடந்து கொண்டுள்ளது என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி புலம்புவது ஏனோ".

இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x