Published : 14 Oct 2021 05:27 PM
Last Updated : 14 Oct 2021 05:27 PM
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 14) வெளியிட்ட உத்தரவு:
"தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.631. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை. நாள்: 05.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் 13.10.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, தனிமனித இடைவெளியினைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11.00 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு 1-11-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
* மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.
*தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படலாம்.
* மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாகச் செயல்படலாம். காப்பாளர், சமையலர் உட்பட அனைத்துப் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
* ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி.
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கு பெற அனுமதி.
* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT