Published : 29 Jun 2014 02:54 PM
Last Updated : 29 Jun 2014 02:54 PM

அடுக்குமாடி குடியிருப்பு விதிகளை கடுமையாக்குக: அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

அடுக்குமாடி குடியிருப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட முழுமையாக கட்டி முடிக்கப்படாத 42 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களே இந்த கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இந்த விபத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் பலர் இறந்து போயும், படுகாயம் அடைந்தும் உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி, இன்னும் மீட்கப்படாமல் அவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இச்செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், சொல்லொணாத் துயரமும் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்றேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

இந்த கட்டிடம் கட்டியுள்ள பகுதி ஏற்கனவே ஏரியாக இருந்த பகுதி என்றும், 11 மாடி கட்டிடத்தை தாங்குகின்ற வகையில் நிலத்தின் தன்மை இல்லை என்றும் தற்பொழுது சொல்லப்படுகிறது. அப்பகுதியில் இதுவரையிலும் 4 மாடிகளுக்கு மேல் எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை என்றும், தற்பொழுதுதான் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான அனுமதி கூட கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம்தான் சி.எம்.டி.ஏ., வழங்கியுள்ளது. 11 மாடி கட்டுவதற்கு நகர்ப்புற மேம்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அது பெறப்பட்டதா, இல்லையா என்பதும் தெரியவில்லை.

மேலும், இப்பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தை குறை கூறுகிறார்கள். கட்டுமான நிறுவனம் இடி விழுந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறி தப்பித்துக்கொள்ள பார்க்கிறது. இது குறித்து கட்டிட வல்லுநர்கள் கூறும்போது, இடி விழுந்தாலும் கட்டிடத்தின் மேல்பகுதியில் மட்டுமே சேதம் ஏற்படும். அஸ்திவாரத்தை உடைக்கின்ற அளவிற்கு இடியின் தாக்குதல் இருப்பதில்லை என்று சொல்கிறார்கள்.

எனவே, இதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. கண் துடைப்பிற்காக கீழ் நிலையில் இருக்கும் அதிகாரிகளை இப்பிரச்சினைக்கு காரணம் காட்டிவிட்டு, அவர்களை பலிகடாவாக்கி, மேல்நிலையில் இருக்கும் அதிகாரிகளும், இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்த அதிகார வர்க்கத்தினரும் தப்பித்து விடக்கூடாது என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

எனவே, தமிழக அரசு விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இனியும் இது போன்ற சம்பவம் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஏற்கனவே கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதால் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதை மறந்து விடக்கூடாது.

மேலும், சென்னை தி.நகரில் விதியை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லி, நீதிமன்றம் அந்த கட்டிடங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசின் அலட்சியப் போக்கால் அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் அதே நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் அந்த கட்டிடங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அப்படியானால் விதி மீறப்பட்டதாக சொல்லப்பட்டது என்னவானது? அன்றாடம் அந்த கட்டிடங்களுக்கு வந்து செல்லும் பொது மக்களின் உயிருக்கு யார் பொறுப்பேற்பது?

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் போக்கு பெருகி வருகிறது. ஆனால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி கட்டப்படுகிறதா? என்றால், இல்லை என்ற பதிலே அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது.

எனவே, தமிழக அரசு அடுக்குமாடி குடியிருப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனியும் நடக்காமல் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x