Published : 13 Oct 2021 04:55 PM
Last Updated : 13 Oct 2021 04:55 PM
புவிசார் குறீயிடு பெற்ற திருபுவனம் பட்டுக்கு சிறப்பு அஞ்சல் உறை இன்று (13-ம் தேதி) வெளியிடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் காலத்திலிருந்து திருபுவனத்தில் பட்டு சேலை உற்பத்தி பாரம்பரியமிக்க கைத்தறியால் அழகுற வடிவமைக்கப்பட்டு வருகிறது. பட்டு சேலைகளின் தலைப்பு, ஓரங்களில் அழகான வடிவமைப்பு, ஜரிகை வேலைப்பாடுகள் அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பதால் திருபுவனம் பட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது.
அதன்படி இந்த பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு பெற கடந்த 2014-ம் ஆண்டு பூம்புகார் நிறுவனத்தில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தமிழக அரசின் புவிசார் குறியீடு ஒருங்கிணைப்பாளர் ப.சஞ்சய்காந்தி விண்ணப்பித்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு திருபுவனம் பட்டுக்கு புவீசார் குறியீடு கிடைத்தது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியா சுதந்திரமடைந்து 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் இதுவரை சேலம் வெண்பட்டு சேலை, கோவை கோராபட்டு காட்டன், பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி சேலை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, நாகர்கோவில் நகை ஆபரணங்கள், ஈத்தாமொழி நெட்டை தென்னை, மாமல்லபுரம் கற்சிற்பம், காரைக்குடி கண்டாங்கி சேலை, பத்தமடை பாய் ஆகிய புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து புவிசார் குறியீடு பெற்ற திருபுவனம் பட்டுக்கு இன்று சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு நிகழ்ச்சி திருபுவனத்தில் நடைபெற்றது. சிறப்பு அஞ்சல் உறையைத் தமிழ்நாடு அஞ்சல வட்ட இயக்குநர் பி.ஆறுமுகம் வெளியிட, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கும்பகோணம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் வரவேற்றார். திருபுவனம் பட்டு கூட்டுறவுச் சங்க மேலாண் இயக்குநர் எஸ்.செல்வம் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்த வழக்கறிஞர் ப.சஞ்சாய்காந்தி கூறுகையில், "தமிழகத்தில் 35 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்குக் கிடைத்துள்ளது.
75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அஞ்சல் துறை சார்பில் பூம்புகார் நிறுவனத்தின் அனுமதியோடு புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பை மேலும் மெருகூட்டும் விதமாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார்கோவில் குத்துவிளக்குக்கும், திருபுவனம் பட்டுக்கும் அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT