Published : 13 Oct 2021 02:37 PM
Last Updated : 13 Oct 2021 02:37 PM
நீட் தேர்வு விவகாரத்தில் பிற மாநில முதல்வர்களை ஒன்றுசேர்க்கும் வகையில் திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன், தெலங்கானா முதல்வரின் மகனைச் சந்தித்துப் பேசினார்.
எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இருந்தே நீட் தேர்வை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வரும் முன்னர், தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று திமுக தெரிவித்திருந்தது.
இதற்கிடையே ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழு 33 நாளில் ஆய்வை முடித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் ஆய்வு, பரிந்துரைகள் அடங்கிய நகலை இணைத்து, 12 மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
பின்பு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் ஆய்வறிக்கை நகல்கள், திமுக சார்பில் தனித்தனியாகக் கேரள, ஆந்திர முதல்வர்களிடம் வழங்கப்பட்டன. இந்நிலையில் இன்று திமுக எம்.பி., டி.கேஎஸ் இளங்கோவன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனும் - மாநிலத் தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமாராவைச் சந்தித்து, ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளை வழங்கினார்.
இதுகுறித்துத் திமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் 12 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதினார்.
அதன் தொடர்ச்சியாக, திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி. கடந்த 6.10.2021 அன்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனையும், 11.10.2021 அன்று ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியையும், நேரில் சந்தித்து தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தை அளித்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று (13.10.2021) காலை, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனும் - மாநிலத் தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமாராவை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தையும், நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளையும் இணைத்து வழங்கினார்.
அப்போது, திமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், வடசென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராசாமி உடனிருந்தார்'' என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT