Published : 13 Oct 2021 02:32 PM
Last Updated : 13 Oct 2021 02:32 PM
இரண்டாம் அரையாண்டு தொடங்கிய அக்டோபர் 1 முதல் 10-ம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகையாக ரூ.5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சொத்து உரிமையாளர்கள் 15.10.2021க்குள் சொத்து வரியைச் செலுத்தி ஊக்கத்தொகையைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, ஊக்கத்தொகையாக சொத்து வரியில் 5 சதவீதம் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அளிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடப்பு இரண்டாம் அரையாண்டிற்குரிய (II-2021/22) சொத்து வரியை, அரையாண்டு காலம் தொடங்குவதற்கு முன்பாகவே 30.09.2021க்குள் 4,01,260 சொத்து உரிமையாளர்களும் மற்றும் இரண்டாம் அரையாண்டு காலம் தொடங்கிய தேதி முதல் அதாவது அக்டோபர் 1 முதல் 10-ம் தேதி வரையில் 1,37,760 சொத்து உரிமையாளர்களும் செலுத்தியுள்ளனர். மேற்படி, இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை இரண்டாம் அரையாண்டு தொடங்கிய 15-ம் தேதிக்குள் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய சொத்து வரியில் 5 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5,000/-) ஊக்கத்தொகையாக ரூ.5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு இரண்டாம் அரையாண்டுக்குரிய (II-2021/22) சொத்து வரியை, 5 சதவீதம் ஊக்கத்தொகை பயன்பெற்றுச் செலுத்த அக்டோபர் 15-ம் தேதி இறுதி நாளாகும். அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குப் பிறகு செலுத்தப்படும் சொத்துவரித் தொகைக்குக் கூடுதலாக 2 சதவீதம் தனி வட்டியுடன் சேர்த்துச் செலுத்த வேண்டும்.
எனவே, சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை இரண்டு நாட்களுக்குள் (15.10.2021க்குள்) செலுத்தி ஊக்கத்தொகையைப் பெற்றுப் பயனடையவும், 15-ம் தேதிக்குப் பிறகு தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT